தமிழகத்தில், இதுவரை நடந்த தேர்தல்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணத்தை மட்டும் நம்பி, சசிகலா அணியினர் களமிறங்குவது, தேர்தல் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல் என, எதுவாக இருந்தாலும், அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கமாகி விட்டது.
அதிகரிக்கும்
அதிலும், இடைத்தேர்தல் என்றால், ஆளுங்கட்சியாக இருப்போர், பணத்தை வாரி இறைத்துவிடுவர். இதன் காரணமாக, பொதுத் தேர்தல்களை விட, இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். பெரும்பாலான தொகுதி மக்கள், தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா என, நினைக்கும் நிலை உருவாகி உள்ளது.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கு, தமிழக போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அதிகளவில், பணம் கொடுத்த புகார் காரணமாக, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில், தேர்தலை ஒத்திவைத்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. எனினும், பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீதோ, கட்சிகள் மீதோ, எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், அவர்கள் வழக்கமான முறையில், பணம் கொடுப்பதை தொடர்கின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், துணை பொதுச் செயலர் தினகரன் களமிறங்குகிறார்.
புறக்கணித்தது
சசிகலா குடும்பத்திற்கு எதிராக, போர்க்கொடி துாக்கிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற முடிவுடன், தினகரன் களமிறங்கி உள்ளார்.
2015ல் நடந்த இடைத்தேர்தலில், மறைந்த முதல்வர் ஜெ., போட்டியிட்டார். அந்த தேர்தலை, தி.மு.க., புறக்கணித்தது. எனினும், அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஜெ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.வெளியூர் ஆட்களை வரவழைத்து, கள்ள ஓட்டு போட வைத்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், கள்ள ஓட்டு போட்டவர்கள், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவமும் அரங்கேறியது. தேர்தல் கமிஷனால், வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அதே தொகுதியில், மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம் போல், போலீசார் மற்றும் அதிகாரிகள் துணையோடு, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை
சசிகலா அணியினர் பணத்தை மட்டும் நம்பி களமிறங்குவதால், இதுவரை இல்லாத அளவிற்கு, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, பணம் வழங்கப்படும் என, கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதை எப்படி தடுப்பது என தெரியாமல், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Comments