ஆனந்த விகடன் : மழைக்காலத்தில் குழந்தைகள் நலம் காக்க என்ன செய்ய வேண்டும்? - சொல்கிறார்
குழந்தைகள் மற்றும் பொது நல மருத்துவர் ப.அருள்.
குழந்தைகளைக் குளிக்கவைத்து நன்றாக உலர்ந்த துணியில் சுத்தமாகத் துடைக்க வேண்டும். மழைக்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி தலைக்குக் குளிப்பாட்டுவதைத் தவிர்க்கவும். இது காது சார்ந்த பிரச்னைகளை உருவாக்கலாம்.
குளிருக்கு ஸ்வெட்டர் அணியும்போது குழந்தைகளின் காதுகளையும் சேர்த்து மூடும் வகையில் தொப்பி அணிவிக்கவும். இதனால், காதுவலி, சளி பிடித்தல் வராது.
டெங்கு கொசுக்கள் பகலில்தான் கடிக்கும் என்பதால் கொசுக்கடி மருந்துகளை பகலிலும் குழந்தைகளுக்கு தடவுவது நல்லது. முகம் தவிர்த்து கைகள், கால்கள் முற்றிலும் தடவ வேண்டும். கொசுக்கள் இல்லாத பாதுகாப்பான இடங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பது நல்லது.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மிதமான உணவுகளை வழங்குவது நல்லது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்.
காய்ச்சல் உட்பட எந்த உடல் உபாதை இருந்தாலும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிக மிக அவசியம். குழந்தைகளின் நாக்கு ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் நன்று.
சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் மழைக்கால டிப்ஸ்...
தண்ணீர் மூலம்தான் பல நோய்கள் பரவுகின்றன. எனவே, தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறிய பின்பு பயன்படுத்துவது சிறந்தது. கொதிக்கவைப்பது என்றால், லேசாக சுட வைக்காமல், குமிழிகள் வரும் வரை கொதிக்கவிட வேண்டும். கொதிக்கவைத்து ஆற வைத்த பின்பு குடிக்கும் பொழுதுகளிலும் லேசாக சுடவைப்பது நல்லது.
டைஃபாய்டு, மலேரியா, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, டெங்கு போன்ற வியாதிகள் மழைக்காலங்களில் மிக சுலபமாக வரக்கூடியவை. எனவே இந்த வியாதிகளின் அறிகுறிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் படிப்படியாகக் கூடுகிறது என்றால், அது டைஃபாய்டு ஜுரமாக இருக்க வாய்ப்புண்டு. தீவிரத் தலைவலியுடன் உடல் எல்லாம் சிவந்து திட்டுத்திட்டாக உடலில் தடிப்புகள் வந்தால் விஷ ஜுரமாகவோ, வைரஸ் ஜுரமாகவோ இருக்கலாம். கண் மஞ்சள் நிறமாகி வயிற்று வலியுடன் வரும் ஜுரம் காமாலை ஜுரமாக இருக்கலாம். வயிற்றுப் பகுதியில் வலது, அல்லது இடது பக்க விலா எலும்புக்கு கீழ் வலியோ வீக்கமோ இருந்தால், காமாலை அறிகுறியாக இருக்கலாம். குளிர் ஜுரம் இருக்கையில், சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தால், சிறுநீரகப் பாதையில் வரும் தொற்றாக இருக்கலாம். ஒவ்வொரு முறை மலம் கழியும்போதும் வலியுடன் கழிவதோ, மலம் கட்டிப்பட்டுப் போகாமல் நீர்த்துப்போவது, மலத்தில் சளி சேர்ந்து போவது எல்லாம் வயிறு சார்ந்த தொற்றாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
வீட்டு உணவு உண்ணும்போது, சூடாக அவ்வப்போது தயாரித்துச் சாப்பிடுவதே நல்லது. எங்கெல்லாம் காரம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் மிளகாய் வற்றலுக்குப் பதிலாக மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. ரசம், மிகவும் சிறப்பான உணவு. அதில் அடங்கியிருக்கும் மிளகு, இஞ்சி, சீரகம், பூண்டு எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. அதே ரசத்தில் வீட்டில் துளசி இருப்பின் சேர்த்துக்கொள்ளலாம். தூதுவளைக் கீரை இருந்தால், தூதுவளை சேர்த்துக் கொள்ளலாம். குருமா போன்ற உணவு வகை செய்யும்போது நட்சத்திர வடிவில் இருக்கும் அண்ணாச்சிப் பூவை (சாதாரணமாக பிரியாணியில் சேர்க்கக்கூடிய பொருள்) நுணுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் வைரஸ் காய்ச்சல் வராமல் நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டக்கூடியவை. நெற்றியில் நீர் கோத்து சளி பிடித்திருந்தால் சுக்கு பத்து போடலாம்.
மிளகைப் பொடி செய்து, தேன் சேர்த்து, இளம் சூடாக்கும்போது லேசாக தேன் பொங்கும். அதைத் தண்ணீரில் கலந்து இரவில் குழந்தைகளுக்குக் கொடுத்தால், மழைக் காலத்தில் வரக்கூடிய சளி இருமல், நெஞ்சில் கபம் அடைப்பது எல்லாம் உடனே சரியாகும்.
வீட்டில் உள்ள 10 வயது, 12 வயதுக் குழந்தைகளுக்கு, ஒரு கைப்பிடி துளசி, இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு, கற்பூரவள்ளி இலை, எல்லாவற்றையும் சேர்த்து கஷாயம் செய்து அரை டம்ளர் குடிக்கத் தரலாம். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், துளசி, கற்பூரவள்ளி போன்றவற்றை இடித்துச் சாறெடுத்து, தேன் சேர்த்து இளம் சூடாக்கிக் கொடுக்கலாம்.
வீட்டில் சிற்றரத்தை (Galangal root) பொடியை வாங்கி வைத்துக் கொண்டு, தேனுடன் அரை தேக்கரண்டி பொடி சேர்த்துச் சாப்பிட்டால் மூட்டுவலியும் போகும், சளி இருமலுக்கும் நல்லது. அமுக்குறாங்கிழங்குப் பொடியை அரை தேக்கரண்டி காலையும் மாலையும் சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்வதும் மூட்டுவலிக்கு நல்லது.
குளிர் பாதிக்காத அளவுக்கு முழுக்கை சட்டைகள், பருத்தியாலான கனமான ஆடைகள் அணிவது நல்லது.
வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் மூட்டுவலி அதிகமாக இருக்கும். தேங்காய் எண்ணெயை சூடுசெய்து கற்பூரத்தை அதில் கரைத்துத் தேய்ப்பது மூட்டுவலிக்கு உடனடி நிவாரணியாக இருக்கும்.
மழைக்காலங்களில் இரவு உணவு சாப்பிடாமல் படுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மழை ஓய்ந்த பின் வரும் தோல் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள தோல்மருத்துவர் பி.சி.மைதிலி தரும் ஆலோசனைகள்...
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உதவியவர்களும் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருந்திருப்பார்கள். முதலில் உடம்பில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இருந்தால் தொற்று நோய்கள் நம்மை எளிதாகத் தாக்கக்கூடும். உடைகள் நனைந்திருந்தால், வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக மாற்ற வேண்டும்.
குளித்த பின் உடலை நன்றாகத் துவட்டி, துண்டை சுத்தமான தண்ணீரில் துவைத்து, நன்கு உலரவைக்க வேண்டும். படர்தாமரை போன்ற காளான் தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திய துண்டு மற்றும் ஆடைகளை மற்றவர்கள் பயன்படுத்தினால் படர்தாமரை பரவும்.
மழைக்காலங்களில் ஷூ அணிவதைத் தவிர்த்து காற்றோட்டமுள்ள செருப்புகளைப் பயன்படுத்தவும். கால்களில் காற்றோட்டம் இருந்தால் தோல் பிரச்னைகள் எதுவும் வராது.
மழைக்காலங்களில் ஈரமான துணிகளை உடுத்தாமல் இருப்பது நல்லது. நன்றாகக் காய்ந்த துணிகளையும் முடிந்தால் பருத்தியினால் ஆன உள்ளாடைகளையும் அணியவும். ஈரமான உள்ளாடைகளை அணியவே கூடாது. உடைகள் விஷயத்தில் கவனமாக இருந்தாலே, சருமப் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம்.
தோலில் படர்தாமரை எனப்படும் காளான் தொற்று, காலில் ஏற்படும் சேற்றுப்புண், குழந்தைகளுக்கு ஏற்படும் சிரங்கு நோய், கொசுக்கடியினால் தோலில் ஏற்படும் ஒவ்வாமை ஆகியவை மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கின்றன. இவை எல்லாம் வராமல் தடுக்க காலை, மாலை இரண்டு வேளையும் மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும்.
Comments