தினமலர் செய்தி : சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை, ஆர்.கே.நகரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் சென்ற அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் வெடித்தது. இதில் சென்னை மேயர் சைதை துரைசாமியும் அவரது உதவியாளர்களும் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. குறிப்பாக வட சென்னை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, கைத்தறித் துறை அமைச்சர் கோகுலஇந்திரா, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
சாந்தோம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த பின், அமைச்சர்கள் குழு ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்றது. கொடுங்கையூர், வ.உ.சி., நகரில், இளைய முதலி தெரு என்ற இடத்தில், தேங்கிஇருந்த மழை நீரை குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர்களை வரவேற்க வட சென்னை வடக்கு மாவட்ட செயலரும், ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவேல், தன் ஆதரவாளர்களுடன் நின்றிருந்தார். சைதை கூறியிருக்கிறார். இதனால் வெற்றிவேலுக்கும், யேசுராஜுக்கும் ஏற்பட்ட துரைசாமியை கண்டதும் வெற்றிவேல், 'இவருக்கு இந்த தொகுதியில் என்ன வேலை' என்று ஆத்திரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு, மேயரின் பாதுகாப்பு அதிகாரி யேசுராஜ், 'முதல்வர் உத்தரவுப்படி, மேயர் இங்கு ஆய்வுக்கு வந்திருக்கிறார்' என வாக்குவாதம், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.யேசுராஜ் மற்றும் மேயரின் தனி உதவியாளர் பழனிச்சாமி ஆகியோரை வெற்றிவேல் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்; அதில், இருவரும் காயமடைந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற துரைசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் மீதும் அடி விழுந்தது. சண்டையை படம் எடுத்த மாநகராட்சி புகைப்படக்காரரிடம் இருந்து கேமரா பறிக்கப்பட்டது.இந்த சம்பவத்தால், மேயரின் வேட்டி, சட்டை முழுக்க சேறும் சகதியுமானது. காரில் இருந்த மாற்று உடையை உடுத்திய பின் மேயர் புறப்பட்டார்.
தொடரும் மோதல்:
அ.தி.மு.க.,வில் துரைசாமியும், வெற்றிவேலும் எதிரும் புதிருமாக உள்ளனர். வட சென்னையில் நடக்கும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மேயர் கலந்து கொண்டால் கோஷ்டி மோதல் ஏற்படுவது வாடிக்கை. கடந்த 2014ல் நடந்த மேம்பாலத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் கூட இரண்டு தரப்பும் மோதியது.
மோதலுக்கு பின்னணி:
முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், சைதாபேட்டை எம்.எல்.ஏ., செந்தமிழன் ஆகியோர் முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் ஆதரவாளர்கள். 2011 சட்டசபை தேர்தலில் துரைசாமி சைதை தொகுதியை பெற முயன்றார். ஜெயகுமார் தலையீட்டில் செந்தமிழனுக்கு அந்த தொகுதி கிடைத்தது. துரைசாமிக்கு கொளத்துார் ஒதுக்கப்பட்டது.
அப்போது முதல் இரு தரப்புக்கும் உரசல்கள் இருந்தன. மேயர் வேட்பாளராக துரைசாமி அறிவிக்கப்பட்ட போது கூட, வட சென்னையில் இந்த கோஷ்டியினர் தேர்தல் வேலையை சரிவர செய்யவில்லை. மேயரான பின் வடசென்னை நிகழ்ச்சி என்றாலே அங்கு இரு தரப்புக்கும் இடையே உரசல் தொடர்ந்தது. இடையில் வெற்றிவேல் மாவட்ட செயலர்பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் பிரச்னை ஓய்ந்திருந்தது. மீண்டும் அவர் மாவட்ட செயலர் ஆகியுள்ள நிலையில் தற்போது மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சேதத்தை தடுக்க தவறியது ஏன்:
மழை வெள்ளம், புயல் சீற்றம் போன்ற காரணங்களால் தமிழகம் அடிக்கடி பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. 2004ல் ஏற்பட்ட சுனாமியால், தமிழகம் சீர்குலைந்தது. சென்னை, கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான உயிர் சேதத்தையும், பொருள் இழப்பையும் சந்தித்தன.
தொடர்ச்சியாக 2011ல் வந்த 'தானே' புயலும் தமிழகத்தை விட்டு வைக்கவில்லை. கடலுாரை கடுமையாக சேதப்படுத்திய புயல், மற்ற மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியது.இப்போதும் புயலும், மழையும் தமிழகத்தை அச்சுறுத்துகின்றன. வட கிழக்கு பருவ மழையின், வெறும் இரண்டு நாள் தீவிரத்தை கூட தாங்க முடியாத அளவுக்கு தமிழகம் தகுதியின்றி இருப்பது தெரியவந்துள்ளது.
சுனாமி, தானே என இயற்கை சீற்றம் தொடர் பாடம் நடத்தியும், மழை தீவிரத்தால் வரும் பாதிப்பை கூட தடுக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது.
சென்னை போன்ற பெரிய நகரங்கள் கூட வெள்ளத்தில் மிதக்கும் நிலைமை ஏற்பட என்ன காரணம்? மழை நீர் வழிந்தோடும் வழித்தடங்களையும் கழிவுநீர் கால்வாய்களையும் குப்பை நீக்கி வைத்திருந்தாலே போதும்; அதை செய்யாததால் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது.
மழை வரும் என தெரிந்ததும் பள்ளிக்கும், கல்லுாரிக்கும் விடுமுறை விடுவது மட்டுமல்ல, தடுப்பு நடவடிக்கை என்பதை அரசும், அதிகாரிகளும், இனியாவது உணர வேண்டும்.
Comments