தினமலர் செய்தி : லண்டன்: இந்தியா ஏழை நாடு என்பது இனிமேல் இல்லை. அது இளமையான நாடு என பிரதமர் மோடி பேசினார்.மூன்று நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோரை சந்தித்தார். இன்று வெம்ப்லே ஸ்டேடியத்தில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார். முன்னதாக விழா ஸ்டேடியத்தில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான கத்களி, பரதநாட்டியம், குச்சுப்புடி, போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. இந்திய நேரப்படி இரவு 10.45 மணிக்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளிக் குழந்தைகளை சந்தித்தனர்.
மோடிக்கு கேமரூன் புகழாரம்
விழாவை துவக்கி வைத்து பிரதமர் டேவிட்கேமரூன் பேசியது, இந்த பிரம்மாண்ட விழா இந்தியா இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கிலாந்து பார்லிமென்ட் ஜனநாயகத்தின் தாய் போன்றது. முதன்முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் மோடியை நான் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. நானும் (டேவிட் கேமரூன்) மோடியும் மிகுந்த சவால்களுக்கிடையே ஆட்சி நடத்தி வருகிறோம். இந்திய பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். இங்கிலாந்தும், இந்தியாவும் மிக பெரிய லட்சித்தை கொண்டுள்ளது. உலகஅளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்றார்
பின்னர் இந்தியர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இரு பெரிய நாடுகளும் ஜனநாயகத்தை வலுப்படுத்திவருகின்றன. 12 ஆண்டுகளுக்கு முன் குஜராத் முதல்வராக இங்கு வந்தேன் இப்போது பிரதமராக இங்கு வந்ததும், உங்களது வரவேற்பு என்னை சொந்த வீட்டிற்கு வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது . உங்களின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் தகுதி இந்தியாவிற்கு உண்டு.
இந்தியா ஒரு இளமையான நாடு. இந்தியா ஏழை நாடு என்பது இனிமேல் இல்லை என்றார்.
Comments