தினமலர் செய்தி : சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி கேரளாவுக்கு அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொருத்த வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிரம்பும் ஏரிகள்
தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகள் பலவும் நிரம்பி வருவதால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏரிகளில் உடைப்பு
கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள 2 ஏரிகள் உடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி ஏரியை சுற்றி உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 1500 பணியாளர்கள், 150 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீரடையும்.என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் குடும்பங்களுக்கும், திருவண்ணமாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் என மொத்தம் 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: கனமழை பெய்வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர்: கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாலும் நாளையும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில், பல்லாவரம், போரூர், ஐய்யப்பன்தாங்கல், குமணன், சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, துரைப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், வேச்சேரி, சோழிங்கநல்லூர், மாங்காடு, உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்வதால் சென்னையில் இன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Comments