
பீஹார் சட்டசபைக்கு, அக்., 12ம் தேதி துவங்கி, நவ., 5ம் தேதி முடிவடைந்த, ஐந்து கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள், 8ம் தேதி எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளின் படி, இப்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, 'மெகா' கூட்டணி அமோக வெற்றி பெற்றது; பா.ஜ., கூட்டணி, 58 இடங்களை மட்டுமே பிடித்து, எதிர்க்கட்சியாக தொடர்கிறது.
தனிப்பெரும் கட்சி:
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின், ஆர்.ஜே.டி., கட்சி, தனிப்பெரும் கட்சியாக, 80 இடங்களை பெற்றுள்ள போதிலும், முதல்வர் பதவியில் அவர் அமர முடியாத நிலை காணப்படுகிறது. கால்நடை தீவன ஊழல் வழக்கு ஒன்றில், ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு, ஜாமினில் உள்ளதால், அவரால் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அவர்களின் இரு மகன்கள், முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். லாலுவின், 'கருணையால்' நிதிஷ் குமார் மூன்றாவது முறையாக, முதல்வராக உள்ளார். வரும், 20ம் தேதி, அவர் பொறுப்பேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்கள்:
இந்நிலையில், பீஹாரின் புதிய எம்.எல்.ஏ.,க்களின் கிரிமினல் வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய அம்சங்களாவன:
*மொத்தம், 143 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; அவர்களில், 96 பேர் மீது, மிகவும் பயங்கர கிரிமினல் குற்றங்களான, கொலை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன; அதில், 12 பேர் மீது கொலை, 26 பேர் மீது கொலை முயற்சி, 13 பேர் மீது ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன
*மொத்தம், 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, லாலுவின், ஆர்.ஜே.டி., கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களில் தான், மிக அதிக கிரிமினல்கள் உள்ளனர். அந்த கட்சியில், 49 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன
*ஆளும் ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களில், 37 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பின்புலம்:
வெற்றி பெற்றவர்களின், 'கிரிமினல்' பின்புலம் இவ்வாறு உள்ள நிலையில், போட்டியிட்டவர்களிலும், ஏராளமானோர் கிரிமினல்கள் தான் என்பதும் தெரியவந்து உள்ளது. 243 இடங்களுக்கு போட்டியிட்ட, 3,450 பேரில், 30 சதவீதமான, 1,038 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; இதை அவர்கள், தங்கள் வேட்புமனுக்களில் தெரிவித்திருந்தனர். அத்தகையவர்களில், 23 சதவீதம் பேர், அதாவது, 796 பேர் மீது பயங்கர கிரிமினல் குற்றங்களான, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பா.ஜ.,வும் சளைத்ததில்லை :
லாலுவின் ஆர்.ஜே.டி., நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு, தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என கூறுவது போல, பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர்களில், 95 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; அவர்களில், 34 பேர், எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகி, மக்கள், 'சேவை'யாற்ற உள்ளனர்
*காங்., சார்பில் போட்டியிட்டவர்களில், 23 பேர் மீது, கிரிமினல் வழக்குகள் இருந்த நிலையில், 17 பேர் தேர்வாகி உள்ளனர்
*எந்த கட்சியையும் சாராமல், சுயேச்சையாக போட்டியிட்டவர்களில், 259 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவர்களில், இருவர் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகி உள்ளனர்
*கொலை, ஆள் கடத்தல் போன்ற பயங்கர குற்றங்களைச் செய்தவர்கள் பட்டியலில், பா.ஜ., சார்பில், 62 பேர் போட்டியிட்டு, 18 பேர் தேர்வாகி உள்ளனர்.
*ஐக்கிய ஜனதா தளம் சார்பில், 41 பேர் போட்டியிட்டு, 24 பேர் தேர்வாகி உள்ளனர். ஆர்.ஜே.டி., சார்பில், 47 பேர் போட்டியிட்டு, 31 பேர் தேர்வாகி உள்ளனர். காங்., சார்பில், 12 பேர் போட்டியிட்டு, 10 பேர் தேர்வாகி உள்ளனர். சுயேச்சைகளில், 212 பேர் போட்டியிட்டு, ஒருவர் தேர்வாகி உள்ளார்.
போட்டியிட்ட கோடீஸ்வரர்கள்:
பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 157 வேட்பாளர்களில், 105 பேர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட, 101 வேட்பாளர்களில், 76 பேர் கோடீஸ்வரர்கள். ஆர்.ஜே.டி., சார்பில், 101 பேர் போட்டியிட்டதில், 66 பேர் கோடீஸ்வரர்கள். காங்., சார்பில், 41 பேர் போட்டியிட்டதில், 25 பேர் கோடீஸ்வரர்கள். 1,150 சுயேச்சைகளில், 229 பேர் கோடீஸ்வரர்கள்.
*தேர்தலில் போட்டியிட்டவர்களின் சராசரி சொத்து மதிப்பு, 1.44 கோடி ரூபாய்; 157 பா.ஜ., வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு, 2.74 கோடி ரூபாய்; 101 ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு, 2.70 கோடி ரூபாய்; 41 காங்., வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு, 3.90 கோடி ரூபாய்
*லாலுவின், ஆர்.ஜே.டி., சார்பில் போட்டியிட்ட, 101 பேரின் சராசரி சொத்து மதிப்பு, 3.25 கோடி ரூபாய்; 1,150 சுயேச்சைகளின் சராசரி சொத்து மதிப்பு, 1.83 கோடி ரூபாய்.
பணக்கார எம்.எல்.ஏ.,க்கள்:
*ஐக்கிய ஜனதா தளத்தின், பூணம் தேவி யாதவ் தான், எம்.எல்.ஏ.,க்களில் மிகப்பெரிய பணக்காரர்; அவருக்கு, 41 கோடி ரூபாய் சொத்து உள்ளது
*காங்கிரசை சேர்ந்த, அஜீத் சர்மாவுக்கு, 40 கோடி ரூபாய், ஆர்.ஜே.டி.,யின் ஜெய்வர்தன் யாதவுக்கு, 17 கோடி ரூபாய், காங்கிரசின் பூர்ணிமா யாதவுக்கு, 16 கோடி ரூபாய், பா.ஜ.,வின் விஜய்குமார் சின்ஹாவுக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.
Comments