தினமலர் செய்தி : சண்டிகர்: அரியானா சாமியார் ராம்பாலுக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஆசிரமத்தில், ஐந்து பேர் உடல்கள் கைப்பற்றப் பட்டதையும், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சொகுசு ஏற்பாடுகள்:
கொலை வழக்கு ஒன்றில், கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த சாமியார் ராம்பால், நேற்று முன்தினம் இரவு, அவரின் ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தின் உள்ளே இருந்த, 15 ஆயிரம் பக்தர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மொத்தம், 12 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போலீசார் மலைக்கும் அளவிற்கு, ஏராளமான வசதிகளும், சொகுசு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
* விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யு., கார்கள் பல நிறுத்தப்பட்டிருந்தன.
* பல அறைகளில், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க, எலக்ட்ரானிக் இரும்பு பெட்டகங்கள் இருந்தன.
* சில மாதங்களுக்கு உள்ளேயே தங்கியிருக்கும் அளவிற்கு, உணவு தானியங்களும், சமையல் பொருட்களும் இருந்தன.
* பிரமாண்ட நீச்சல் குளம், வழுவழு தரையுடன், தியான அறைகள், எல்.இ.டி., 'டிவி' திரைகளுடன் பிரமாண்ட அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ராம்பால், 220 கி.மீ.,யில் உள்ள பஞ்சகுலா நகருக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் உடல் நல பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டார். சண்டிகரில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கைது வாரன்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல், நீதிமன்றத்திற்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
முன் ஜாமின் ரத்து:
அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் மீதான, 2006ல் நடைபெற்ற கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமினை ரத்து செய்தது. ஆசிரமத்தில், ஐந்து பேர் உடல்கள் கைப்பற்றப்பட்டதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாமியாரை பார்க்க, சண்டிகர் கோர்ட், பஞ்சகுலா மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
Comments