OneIndia News : டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தமே 7 பேர்தான்
தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதுவும் அமைச்சரவை விரிவாக்கத்தில்
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை
அளித்திருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த போது தமிழகத்தைச் சேர்ந்த பொன்.
ராதாகிருஷ்ணன் மட்டுமே இணை அமைச்சரானார். அப்போது லோக்சபா தேர்தலில்
வெற்றி பெறாத நிலையிலும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர்
சுதீஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் கூட அமைச்சர்களாகக் கூடும்
என்று பேசப்பட்டது.
அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கும் கூட அமைச்சர் பதவி
கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவை
கடும் அதிருப்தி அடைந்தனர். சரி அமைச்சரவை விரிவாக்கத்தின் போதாவது, தமிழக
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை மனதில் வைத்து இந்த கட்சிகளுக்கு வாய்ப்பு
கிடைக்கும் என்றும் பேசப்பட்டது.
தற்போது மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. இருந்த போதும்
தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மோடி அரசில் மொத்தம் உள்ள 66 அமைச்சர்களில் 7 பேர்தான் ஒட்டுமொத்தமாக தென்
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆந்திராவின் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், அசோக் கஜபதி ராஜூ,
கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார், சதானந்த கவுடா, சித்தேஸ்வரா,
தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்தான் இந்த 7 பேரும்.
இதில் கேரளாவைச் சேர்ந்த எவருமே மத்திய அமைச்சராக இல்லை என்பதும்
கவனிக்கத்தக்கது.
ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மொத்தம் 27 பேர் தென்
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அதுவும் கேபினட்
அமைச்சர்கள் மட்டுமே 12 பேர். அத்துடன் ஆந்திராவுக்கு 11, கேரளாவுக்கு 8 என
மன்மோகன்சிங் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இருந்தது.
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற
வேண்டும் என்ற முனைப்பு ஒரு பக்கம் காட்டப்படுகிறது. ஆனால் இப்படி போதிய
பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தால் எப்படி இந்த மாநில மக்களின்
கோரிக்கைகள் நிறைவேறும்? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.
Comments