மதுரை: அதிமுகவினரின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவு இல்லை.
மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக என்ற பெயரில்
மக்களை துயரப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். மக்கள் படும் அவதியைப்
பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால்
மக்களின் இயல்பு வாழ்க்கை தினந்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கிறது.
மதுரையைச் சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காவடி திருவிழாவின்
மதுரையின் மையப் பகுதி இன்று ஸ்தம்பிப்பிக்குள்ளானது. பொதுமக்கள் அமைச்சரை
வாய் விட்டுத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
தீபாவளி பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றுக்காக வெளியில் வந்த மக்கள் இந்த கொடுமையான
அதிமுக பேரணியால் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஜெ. பார்வையில் விழுவதற்காக
நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே
அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் தமிழகம்
முழுவதும்.
மண் சோறு, தீச்சட்டி
மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது,
அங்கப்பிரதட்சனம் செய்வது, உண்ணாவிரதம், வாயில் கருப்புத் துணி கட்டிக்
கொள்வது என விதம் விதமாக செய்தபடி இருக்கின்றனர் அதிமுகவினர்.
செல்லூர் ராஜுவின் காவடித் திருவிழா
அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்காக பெண்களை விட்டு பால் குடம் ஏந்தி
பவனி, காவடி ஊர்வலம் என மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அமைச்சர்
செல்லூர் ராஜு.
இலவசமாக குடம், பால்
இதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை காசு கொடுத்து திரட்டிக் கொண்டு
வந்துள்ளனர். பின்னர் அனைவரையும் வைகை ஆற்றில் இறக்கி விட்டு, ஆளுக்கு ஒரு
சில்வர் குடம் கொடுத்தனர். பின்னர் அதில் ஒரு பாக்கெட் பால், தேங்காய்,
தலைக்கு 100 ரூபாய் என கொடுத்து ஊர்வலத்தைத் தொடங்கினர்.
சிம்மக்கல் முதல் மேலமாசி வீதி வரை
இந்த ஊர்வலம் சிம்மக்கல்லில் தொங்கி மேலமாசி வீதி வரை நடந்தது. வீதியை
அடைத்து நடந்த இந்த ஊர்வலத்தால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது. இப்போது
தீபாவளி சமயம் என்பதால் கடைகளுக்கு வந்த மக்கள் இந்த அக்கப்போரைப் பார்த்து
தலையில் அடித்துக் கொண்டனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது.
ஆயிரக்கணக்கில் காசு
இந்தக் கொடுமையின் முக்கிய விஷயம் என்னவென்றால் காவடியில் கலந்து கொண்ட
பறவைக் காவடி எடுத்தவருக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தனராம். அதேபோல் வேல்
குத்திக் கொண்டவர்களுக்கு ரூ. 2000 கட்டணமாம். மொட்டை போட்டுக் கொண்டால்
500 ரூபாய் கொடுத்தார்களாம்.
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பலரும் புலம்பினர்.. பலர்
அமைச்சரைத் திட்டினர்!
Comments