ஜெ.,யின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு திட்டங்களை துரிதப்படுத்த உத்தரவு: இடைத்தேர்தலில் 'கோட்டை' விடாமல் இருக்க அ.தி.மு.க., தீவிரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், அத்தொகுதியை மீண்டும் அ.தி.மு.க.,வே கைப்பற்ற மும்முரம் காட்டுகிறது.


அரசு சிறப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, உயர் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்தவர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா. இதனால், ஸ்ரீரங்கம் தொகுதி முக்கியத்துவம் பெற்றது.


5,200 திட்டங்கள்:

அரசின், அனைத்து துறைகள் தரப்பிலும், இத்தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஐந்து முறை, தொகுதிக்கு சென்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களையும் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.கடந்த ஜூலை வரை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, 2,185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,200 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இது மட்டுமின்றி, 193 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளையும் துவக்கி வைத்தார்.சமீபத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 110வது விதியின் கீழ், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சிறப்பு திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார்.இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்துள்ளார். அவரது ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி, காலியானதாக அறிவிப்பு வெளியான, ஆறு மாதத்திற்குள், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு, முன், ஸ்ரீரங்கம் தொகுதி தயாராகும் வகையிலான ஏற்பாடுகளை, ஆளுங்கட்சி துவங்கியுள்ளது.

அறிவுறுத்தல்:

இத்தொகுதியில், அரசாலும், ஜெயலலிதாவாலும், அமைச்சர்கள் மூலமும், அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து துவக்கும்படி, வேளாண் துறை, பொதுப்பணித் துறை, மின் துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, சிறப்பு திட்டங்கள் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணிகளை முடித்தால், அடுத்த இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க.,வே அங்கு முழுமையான வெற்றி பெறும் என்பது, அக்கட்சியின் கணிப்பு.அதனால், தற்போது நடந்து வரும் பணிகளை முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, இத்துறைகளைச் சேர்ந்த, உயர் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments