பெங்களூரு சிறையில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக
சிறைக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, ஆலோசனை நடந்துள்ளது.
இதற்கு, ஜெயலலிதா அனுமதிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், அடைக்கப்பட்டுள்ளனர்.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த, ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை, வரும், 7ம் தேதிக்கு, கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இதனால், பெங்களூரு சிறையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், இருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், ஜெயலலிதாவை பெங்களூரு சிறையில் இருந்து, சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றுவது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு வருவதாக, ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறை விதிகளின்படி, உடல் நிலை, பாதுகாப்பு, இதர சிறப்பு காரணங்களுக்காக, சிறை மாற்றம் கோரி, தண்டனை கைதிகள் விண்ணப்பிக்கலாம். எந்த சிறையில் இருக்கின்றனரோ அந்த சிறை ஐ.ஜி.,க்கு விண்ணப்பிக்க வேண்டும். எந்த சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரப்படுகிறதோ, அந்த சிறை ஐ.ஜி., அதற்கான முடிவெடுக்க வேண்டும். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, 'இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளவர். உடல் நிலை, பாதுகாப்பு காரணங்களை காட்டியே, சிறை மாற்றம் கோர முடியும் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் கூறியதாவது:எந்த ஊரிலும், இடத்திலும், மாநில அரசின் தனி உத்தரவு மூலம், நிரந்தர மற்றும் தற்காலிக சிறை, ஏற்படுத்த முடியும். மேலும், தண்டனை கைதிகளை, ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவது சகஜம்.தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்படும்போது, சொந்த மாநிலத்துக்கு சிறை மாற்றம் செய்யப்படுகின்றனர். உடல்நலம், பாதுகாப்பு காரணங்களுக்காக, சிறை மாற்றம் கோரலாம்.இவ்வாறு, வழக்கறிஞர் கண்ணதாசன் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணை, 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முதல் கட்டமாக, ஜெயலலிதாவை மட்டும், தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதற்கு, ஜெயலலிதா ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடையும்.
Comments