
புதுடில்லி: இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்பவர்கள்.
இந்தியாவுக்காகவே மடிவார்கள். அவர்களது தேசப்பற்றை ஒருபோதும் குறைத்து
மதிப்பிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார்
தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அதில்
சமீபத்தில் அல் குவைதா பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ குறித்தும்,
இந்தியாவில் அல் குவைதா அமைப்பை துவங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது
குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்திய
முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்கிறார்கள். இந்தியாவுக்காவே மடிவார்கள்.
இந்தியாவிற்கு பாதகமான செயல்களை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவர்களது
தேசப்பற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது இந்திய முஸ்லிகளை தங்களது
தாளத்திற்கு ஏற்றவாறு ஆட வைக்கலாம் என யாராவது நினைத்தால் அவர்கள் ஏமாந்து
போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணம்
குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மோடி, இந்தியாவுக்கும்,
அமெரிக்காவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கடந்த சில நூற்றாண்டுகளை
கவனித்து பார்த்தோமானால், உலகெங்கிலும் உள்ளவர்களை அமெரிக்கா ஈர்த்துள்ளது.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவும்
அமெரிக்காவும் இயற்கையிலேயே ஒரே மாதிரியான சுபாவம் கொண்ட நாடுகள். கடந்த
நூற்றாண்டில் இரு நாடுகளிடையேயான உறவில் சில மேடு, பள்ளங்கள்
இருந்திருக்கலாம். ஆனால் 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரு நாடுகளுக்கும்
மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. நமது உறவுகள் ஆழமானவை. இந்த உறவுகள்
இனி வரும் காலங்களில் மேலும் மேம்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
Comments