காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'தி.மு.க.,வுடன் ஒட்டோ, உறவோ வேண்டாம்'
என, உறுதியாக கூறிவிட்டதால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் கட்சியை
தமிழகத்தில் தனித்தே போட்டியிட வைக்க வேண்டும் என்பதில், தமிழக காங்கிரஸ்
தலைவர் ஞானதேசிகன் உறுதியாக உள்ளார்.இதற்கு, காங்கிரசார் மத்தியில் ஆதரவு
திரட்டும் பணியிலும் தீவிரமாக இருக்கிறார், ஞானதேசிகன்.
இதனால், லோக்சபா
தேர்தல் தோல்விக்குப் பின், இரண்டு தரப்பில் நிலவி வந்த கசப்புகள் மெல்ல
மறைந்து வந்த நிலையில், மீண்டும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில், விரிசல்
அதிகமாகி இருக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக,
சமீப காலமாக கருத்து தெரிவிக்கும் போதெல்லாம், காங்கிரசை கடுமையாக
வசைபாடுவதை வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார் தி.மு.க., தலைவர்
கருணாநிதி.அவர் சொல்லும் கருத்துகளுக்கெல்லாம் கடுமையாக பதிலடி தர, கட்சி
மேலிடத்தில் ஆதரவு கேட்டிருக்கிறார் ஞானதேசிகன். அனுமதி கிடைத்ததும்,
தமிழகம் முழுவதும் சென்று, தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கவும் அவர்
தயாராகி வருவதாக, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.இது தொடர்பாக,
காங்கிரசார் கூறியதாவது:லோக்சபா தேர்தல் வரையில் காங்கிரசையும்,
பா.ஜ.,வையும் சம துாரத்தில் வைத்து விமர்சித்து வந்த தி.மு.க., இப்போது,
பா.ஜ., தரப்பை நோக்கி செல்கிறது.
பா.ஜ., அரசின் பட்ஜெட்டை தி.மு.க.,
தலைவர் கருணாநிதி வரவேற்று, பாராட்டினார். தமிழக நலன் சார்ந்த
திட்டங்களுக்காக, மத்திய அரசை ஆதரிப்போம் என, சொல்லியிருக்கின்றனர்.
ராஜ்யசபாவிலும் ஆதரவளிக்க, மத்திய அமைச்சர்களிடம் தி.மு.க., ராஜ்யசபா
உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்துள்ளார்.அதேபோல, இலங்கைத் தமிழர்
பிரச்னையில் காங்கிரசை, கருணாநிதி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பா.ஜ.,
அரசை விமர்சிப்பதாக இருந்தால் கூட, காங்கிரஸ் அரசையும் சேர்த்து
விமர்சிக்கிறார். அதனால், தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்க தயாராகி
வருகிறார், ஞானதேசிகன்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Comments