அல்ஜியர்ஸ்: 110 பயணிகளுடன் அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர்
அல்ஜிரி நடுவானில் திடீரென மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விமானம் மாலி நாட்டுக்கு மேலே பறந்தபோது தீவிரவாதிகளால் சுட்டு
வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில்
இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு
கிளம்பியது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும்
இருந்தார்கள். அந்த விமானம் கிளம்பிய 50வது நிமிடத்திற்கு பிறகு
அல்ஜீரியாவின் தரை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரேடாருடனான தொடர்பு
துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதனால் விமானத்தை தேடும் பணியில் அல்ஜீரிய அதிகாரிகள் தீவிரமாக
ஈடுபட்டு வருகிறார்கள். அவசர காலத்து விமானம் ஒன்றையும் அனுப்பி
தேடிவருகிறார்கள்.
இந்த விமானம் இரு நகரங்களுக்கு நடுவே ஆப்பிரிக்காவின் மாலி நாட்டை கடந்து
செல்வது வழக்கம். அங்கு தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக தீவிரவாதிகள்
தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். எனவே அந்த தீவிரவாதிகள், உக்ரைனில்
மலேசிய விமானத்தின் மீது நடத்திய தாக்குதலை போல அல்ஜீரிய விமானம் மீதும்
தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு
முன்பு, கோலாலம்பூரில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்
நடுவானில் மாயமானது. இதுவரை அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்
அல்ஜீரிய விமானம் திடீரென மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments