பெங்களூர்: பெங்களூரில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2
உடற்பயிற்சி ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள முன்னணி தனியார் பள்ளியில் 6 வயது மாணவி
பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பாக
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெற்றோர் போராட்டம் வெடித்ததால் பள்ளியின் ஸ்கேட்டிங் ஆசிரியர் முஸ்தபா
என்பவரை கடந்த 20ந் தேதி, பெங்களூர் போலீசார் கைது செய்தனர். அத்துடன்
பெங்களூர் நகரத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க தவறியதாகக் கூறி
போலீஸ் கமிஷனராக இருந்த ராகவேந்திர அவுராத்கர், ஜூலை 21 ந் தேதி அதிரடியாக
மாற்றப்பட்டார்.
புதிய கமிஷனராக எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து
பள்ளியின் நிறுவனர் ருஸ்டம் கேரவாலா கைது செய்யப்பட்டு மறுநாளே ஜாமீனில்
விடப்பட்டார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு உடற்பயிற்சி ஆசிரியர்களான
லால்கிரி, வாசிம் பாஷா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். தங்களுக்கு
கிடைத்த உறுதியான ஆதாரங்களை வைத்து இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக
போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் கமிஷனர் எம்.என்.ரெட்டி,
இன்று கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த ஜூலை 3-ந் தேதியன்று கூட்டாக
மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட
முஸ்தபாவுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில்
அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.
Comments