
உபி. மாநிலத்தில் மோடி, முலாயம் ஆகியோரின் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதனால் உ.பி.அரசியலில் இன்று அரசியல் டென்ஷன் தொற்றியுள்ளது. லோக்சபா
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் வேளையில், அரசியல்
கட்சியினர் சுறு, சுறுப்பு அடைந்துள்ளனர். தங்களின் செல்வாக்கை உயர்த்த
பல்வேறு கட்டங்களாக அனைத்து கட்சியினரும் தங்களின் பிரசாரத்தை
துவக்கியுள்ளனர்.
உ .பி.,யில் மோடி- ராகுல்- முலாயம் ; வாரணாசியில்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதே வேளையில் உபி. மாநிலம் கோராக்பூரில் பா.ஜ.சார்பில் நடக்க உள்ள பிரமாண்ட
பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி
உரையாற்றுகிறார். இதனால் இரு வேறு இடங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. தவிர இருநாள் பயணமாக உபி. மாநிலம் அமேதி தொகுதிக்கு
காங்.துணை தலைவர் ராகுல் விசிட் அடித்துள்ளார்.
கத்தியுடன் ஒருவர் கைது: மோடி பங்கேற்கும் மன்பேலா மைதானத்தில்
போலீசார் நடத்திய சோதனையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவர்
கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் வருகைக்கு எதிர்ப்பு : அமேதியில்
ராகுல் வருகைக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு
அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள், சுகாதாரம் முறையாக
பேணிக்காத்திட தவறி விட்டதாக இந்த கட்சியினர் தங்களின் எதிர்ப்பை
தெரிவிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் காங்., தரப்பிலோ தமது குடும்ப தொகுதியான
அமேதியில் ஏராளமான திட்டப்பணிகள் நடந்திருப்பதாக பெருமைப்படுகின்றனர்.
தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை.: இது குறித்து ராகுல் இன்று ஒரு
நிகழ்ச்சியில் பேசுகையில்: உ .பி., மாநிலம் கடந்த 30 ஆண்டுகளாக கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசை இங்கு நாங்கள்
கொண்டு வருவோம். இங்கு காங்., விரைவில் ஆட்சியை அமைக்கும். அடிப்படை மோசமான
பணிகள் நடந்துள்ளது என்றும், இதற்கு மாநில அரசே பொறுப்பு என்றும், இங்கு
முறையான கட்டமைப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும் குறை கூறியுள்ளார்.
தமது அமேதி தொகுதியில் ஏரளமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு
சிலர் வருவார், போவர், அமேதி தொகுதி மக்கள் மீது நான் எவ்வளவு அன்பு
வைத்திருக்கிறேன் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் பணிகளை
நாங்கள் பிறர் போல தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை. என்றும் கூறினார்.
மோடி- காங்., மீது முலாயம் தாக்கு: வாரணாசியில்
நடந்த கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் பேசுகையில்:
பணவீக்கத்தை கட்டுப்படுத்த காங்., அரசு தவறி விட்டது. இந்நாட்டில்
பட்டினிச்சாவு தொடர்வதற்கு காங்கிரசே காரணம். சீன எல்லை மீறலுக்கு மத்திய
அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. விலைவாசி உயர்ந்து வருகிறது. கடந்த 5
ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு இந்த நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. இளைஞர்கள்
பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சமாஜிவாடி கட்சி
நிர்வாகிகள் மக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மோடி இந்த
நாட்டிற்கு எதுவும் செய்வில்லை. மோடி தவறான பழி தீர்க்கும் அரசியல்
நடத்துகிறார். எனக்கு மிரட்டல் வருகிறது. ஆமதாபாத்திற்கு நான் வந்தால் எனது
பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்கிறார்.
குஜராத் கலவரத்தில் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
மோடி பேச்சு:
கோராக்பூரில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகையில்: சமீப
காலங்களில் பா.ஜ., நடத்தும் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து
கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு கூட்டமும் இது வரை காணாத வரலாற்றை உடைத்து
வருகிறது. நாடு முழுவதும் பா.ஜ., அலை வீசி வருகிறது. எனக்கு மக்கள் வெள்ளம்
போல் கூடி அளிக்கும் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வரவிவருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்கள்
முடிவு எடுத்து விட்டனர். காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகப்போகிறது.
இதற்கு சமீபத்திய சட்டசபை தேர்தலே சான்று.
ஒற்றுமையை வலியுறுத்தும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நாடு முழுவதும்
உள்ள இரும்பு சேகரிப்பு மூலம் அமைக்கப்படும். இது அமெரிக்காவில் உள்ள
சுதந்திரசிலையை விட 2 மடங்கு பெரிதாக இருக்கும். காங்கிரஸ் ஏழைகள் குறித்து
பேசி வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே ஏழைகள் குறித்து காங்கிரசுக்கு
ஞாபகம் வரும். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து டீ விற்ற ஒருவன் தலைவராக
வருவதை காங்கிரசால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால் நடவடிக்கை எதுவும்
இல்லை.
காங்கிரஸ் ஏழைகள் அதிகாரத்திற்கு வருவதை ஏற்று
கொள்ளாது. குஜராத் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. இங்கு
அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்று வருகின்றனர். இங்கு கடந்த 10
ஆண்டுகளாக மோதல்கள் எதுவும் இல்லை. குஜராத்தை போல உ .பி.,யை உருவாக்க
அகிலேஷம், முலாயமும் தவறி விட்டனர், இது அவர்களால் முடியாது. விவசாயிகள்
உரத்தை கள்ளச்சந்தையில் வாங்க வேண்டியுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்
கோராக்பூர் கூட்டத்தில் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில்: இந்த நாட்டில காங்கிரஸ் தான் பெரும் மதவாத கட்சி. பா.ஜ., மட்டுமே சிறந்த மதச்சார்பற்ற கட்சி என்றார்.
பிரதமர் பொறுப்புக்கு தயார்: ராகுல் இன்றைய பிரசாரத்தில் ராகுல் பேசுகையில்: என்னை பிரதமர் பொறுப்புக்கு எம்.பி.,க்கள் தேர்வு செய்தால் இதனை நான் பரிசீலிப்பேன் என்றார்.
Comments