சமரச பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை: அழகிரி பதில்

மதுரை:எனக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமரசம் நடந்தால், ஏன் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்?'' என்று மதுரையில் அழகிரி, நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் அவர், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் சமரச பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறதே...

தெரியவில்லை. எனக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமரசம் நடந்தால், ஏன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்?

பிறந்த நாளில் அடுத்த கட்ட முடிவு எடுப்பதாகக் கூறப்படுகிறதே...
தொண்டர்களிடம் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் கருத்து கேட்கவில்லை. அதற்குள் அதிர்ச்சி செய்தியை, கருணாநிதி அறிவித்ததால், அதில் இருந்து, இன்னும் நான் மீளவில்லை.

பிறந்த நாளுக்கு மறுநாள், உட்கட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து, ஆதாரங்கள் வெளியிடுவதாகக் கூறியுள்ளீர்களே...

அப்படி நான் ஏதும் சொல்லவில்லை. நீங்களாக இட்டுக்கட்டி எப்படி கூறலாம்? உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

சென்னை உட்பட பல பகுதிகளில் ஸ்டாலின் ஆதரவாளர்கள், உங்கள் உருவ பொம்மையை எரித்துள்ளனரே...
ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? அவர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருந்தால், ஒரு நாள் முன், என் பிறந்த நாளை கொண்டாடியதாக எடுத்துக் கொள்கிறேன்.

விழுப்புரத்தில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'தி.மு.க.,வில் நடப்பது நாடகம். தே.மு.தி.க.,வை கட்சிக்குள் இழுக்கப் பார்க்கின்றனர்' என கூறியுள்ளாரே...
அது தொடர்பாக, நான் பதில் கூற விரும்பவில்லை.

பேட்டி முடியும் தறுவாயில், நிருபர்களை தானாகவே அழைத்த அழகிரி, 'ஸ்டாலின் பாதுகாப்பு கேட்டது குறித்து கேட்கவில்லையே?' எனக் கேட்டு, அவரே கேட்டு கூறிய பதில்:
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு, மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசிடம், அவர் கேட்டிருக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு இருப்பதால், மத்திய அரசிடம் கேட்டுள்ளார் போல.

நீங்கள் பாதுகாப்பு கேட்கவில்லையா?
எனக்கு தொண்டர் தான் பாதுகாப்பு.

பிறந்த நாள் வாழ்த்து, ஸ்டாலின் கூறினாரா?
சொல்லவில்லை.இவ்வாறு அழகிரி கூறினார்.

Comments