' அம்மா கொடுத்தார்கள்; எடுத்தார்கள்'- வேட்பாளர் தகுதி இழந்த சின்னத்துரை

சென்னை: பல்வேறு ஊழல் புகார்கள் கட்சியின் தலைமைக்கு சென்றதை அடுத்து அ.தி.மு.க,வின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான சின்னத்துரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வகித்த அனைத்து கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த பறிப்பு குறித்து சின்னத்துரை நிருபர்களிடம் கூறுகையில் அம்மா கொடுத்தார்கள், அம்மா எடுத்து கொண்டார்கள்.
நான் எப்போதும் அம்மாவின் விசுவாசியாக இருப்பேன் என்றார்.
வரும் பிப்- 7ம் தேதி நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் விஜிலா (நெல்லை மேயர்), சசிகலா புஷ்பா ( தூத்துக்குடி மேயர்), சின்னத்துரை ( தூத்துக்குடி மாவட்ட பஞ்., தலைவர் ) , நெல்லையை சேர்ந்த முத்துக்கருப்பன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதில் சின்னத்துரை மீது கட்சி தொண்டர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். குறிப்பாக இவர் பல கோடி ஊழல் செய்திருப்பதாகவும், கட்சி வளர்ச்சி பணியில் எதுவும் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பி வைக்கப்பட்டது. சட்டசபை செயலருக்கும் தனியாக புகார் மனு சென்றது. இதனை அறிந்த முதல்வர் ஜெ., உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெ.,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சின்னத்துரை கட்சியின் குறிக்கோள் , கோட்பாடு, கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கை கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே இவர் கட்சியில் வகித்து வந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். இவருடன் கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும் கேட்டு கொள்கிறேன்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சின்னத்துரை, அம்மாதான் எனக்கு தெய்வம், கொடுத்தார்கள், எடுத்து கொண்டார்கள், இதில் எனக்கு வருத்தம் இல்லை. யாரும் என்னை பற்றி சொல்லும் தவறான தகவலை என்னிடம் கேட்காதீர்கள். என்றார்.

இவருக்கு பதிலாக கழகத்தின் அமைப்பு செயலாளர் ஏ.கே., செல்வராஜ் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்: ஏ.கே., செல்வராஜ், இவர் முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சராக பணியாற்றியவர்.

Comments