மதுரையில் நடந்த, மு.க.அழகிரியின், 63வது பிறந்த நாள் விழாவில், பல்வேறு
மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாளர்கள், தி.மு.க., - எம்பி.,க்கள் மூன்று
பேர் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வாழ்த்து கூறினர்.
கடந்த இரண்டு நாட்களாக அழகிரி வீட்டுக்கு முன், அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சி அளித்தது.பிறந்த நாளை முன்னிட்டு, அழகிரியின் வீட்டில் யாகம் நடந்தது.
தல்லாகுளம் அவுட்போஸ்ட்டிலிருந்து, சாரட் வண்டியில் அழகிரி, தயாநிதி அழகிரி அமர்ந்து சென்றனர். வண்டியை, முன்னாள் துணை மேயர் மன்னன் ஓட்ட, மன்றம் வந்தடைந்தார்.
அங்கு, 63 கிலோவில் தயாரிக்கப்பட்ட பிறந்த நாள், 'கேக்'கை வெட்டி, மகன் தயாநிதி அழகிரிக்கு ஊட்டினார். பின், ஆதரவாளர்கள், நிர்வாகிகள் என, வரிசையாக வந்து, மேடையில் இருந்த அழகிரிக்கு வாழ்த்து கூறினர்.
வாழ்த்து கூற வந்திருந்த, ராமலிங்கம் எம்.பி., கூறுகையில், ""கருணாநிதி என்ற எங்கள் குடும்பத்தில், எனக்கு அழகிரி மூத்த அண்ணன்; அவரை வாழ்த்த வந்தேன். கட்சியில், தற்போது நிலவும் பிரச்னைக்கு, விரைவில் நல்ல முடிவு ஏற்படும்,'' என்றார்.
ராமநாதபுரம் எம்.பி., ரித்தீஷ், ஏராளமான வாகனங்களில் வந்து அழகிரியை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான, நடிகர் நெப்போலியன் "அஞ்சா நெஞ்சர் 63' என்ற புத்தகத்தை வெளியிட்டார். நலத் திட்டங்களாக இலவச தையல் மெஷின்கள், அயர்ன் பாக்ஸ்கள், மூன்று சக்கர வண்டிகள், சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டன. விழாவில், பங்கேற்றவர்களுக்கு, அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.தூத்துக்குடி, கரூர், திருவாரூர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, திருவள்ளூர், புதுக்கோட்டை, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் இருந்தும், அங்குள்ள மாவட்ட செயலர்களின் அதிருப்தியாளர்கள் பங்கேற்றனர். பகல், 2:40 மணிக்கு விழா முடிந்து, ராஜா முத்தையா மன்றத்திலிருந்து இருந்து, அழகிரி புறப்பட்டார்.
எம்.ஜி.ஆர்., பாட்டுகளின் மெட்டு
அழகிரி, விழா மேடைக்கு வரும் வரை, "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...' "அச்சம் என்பது மடமையடா...' போன்ற எம்.ஜி.ஆர்., பாட்டுகளின், "மெட்டு' கள் ஒலித்தன.
சிங்கத்தை கொஞ்ச முடியுமா... அண்ணனை மிஞ்ச முடியுமா, தென்னகத்தின் சேகுவாரே, எங்கள் நேதாஜியே என, நகரின் பல்வேறு இடங்களிலும், விழா நடந்த மண்டபத்திலும், "போஸ்டர்கள்' பளிச்சிட்டன.
பிறந்த நாள் கேக்கில், மலர் பாதையா... முள் படுக்கையா... எது தேர்ந்தெடுத்தாலும் அண்ணன் வழியில் நாங்கள்... என, எழுதப்பட்டிருந்தது.
விழா நடந்த இடத்திற்கு அருகே உள்ள அழகிரியின் 'பிளக்ஸ்' பேனருக்கு பால் உட்பட, 10 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
ஆதரவாளர்களில் ஒருவர், 12 அடி நீளத்தில் வாயில் வேல் குத்தி வந்தார்.
உசிலம்பட்டி தி.மு.க.,வினர், பெரிய சைஸ் அரிவாள் பரிசு அளித்தனர்.
கருணாநிதி முடிவு என்ன? : அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு, தி.மு.க., மாவட்ட செயலர்கள் யாரும் செல்லக்கூடாது' என, தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி, அழகிரிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள், நெப்போலியன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், "அழகிரிக்கு ஆதரவாக செயல்படுவோம்' என, தெரிவித்தனர்.
இது, கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என, நம்பப்படுகிறது.
இதுகுறித்து, தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர் கூறியதாவது: கட்சிக்கு எதிரான போக்கால் தான் அழகிரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அவரை சந்தித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர் சொல்படி நடப்போம் என, எம்.பி.,க்கள் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதுவும் கட்சித்தலைமைக்கு எதிரான கருத்தே. ஆகையால் அந்த, எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, கட்சித் தலைவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
சமரசத்திற்கு திடீர் நிபந்தனை : ""என் மீதும், ஆதரவாளர்கள் மீதும், தலைமை எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்யாத வரை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அழகிரி கூறினார். தி.மு.க.,விலிருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, அக்கட்சித் தலைவரின் மகன்களில் ஒருவரும், தென் மண்டல அமைப்புச் செயலருமான, அழகிரியின் பிறந்த நாள் விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது.
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எத்தனையோ ஆண்டுகள் என் பிறந்த நாள் கொண்டாடப்பட்டாலும், இந்தாண்டு நடந்த விழா, சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன்.
நேரில் வந்து என்னை வாழ்த்திய, தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எனக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்; அவருக்கும் நன்றி.
பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், இரண்டு நாட்களாக எனக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு, அழகிரி கூறினார்.
பின், நிருபர்கள் கேள்விக்கு, அவர் அளித்த பதில்:
தி.மு.க., சமரசம் செய்தால் அதை ஏற்பீர்களா?
கலைக்கப்பட்ட மதுரை நகர் தி.மு.க.,வால், நிர்வாகிகள் பதவி இழந்து உள்ளனர்; சஸ்பெண்ட் செய்யப்பட்டு
உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கையை நீக்காத வரை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்களா?
இல்லை; என் குடும்பத்தில் தயாளும், செல்வியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி வாழ்த்து: பிறந்தநாளையொட்டி அழகிரிக்கு நடிகர்கள் ரஜினி, பிரபு ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments