லோக்சபா தேர்தலில் தொங்கு பார்லிமென்ட்: கருத்து கணிப்பில் தகவல்

புதுடில்லி : வரும், லோக்சபா தேர்தலில், மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமென்ட் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதை அடுத்து, இதில், யார் வெற்றி பெறுவர் என்பது பற்றி, தனியார் நிறுவனங்கள் சார்பில், கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஊடகங்கள் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.ஐ.பி.என்., தொலைக்காட்சி நிறுவனமும், 'லோக்நீதி - ஐ.பி.என்., நேஷனல் டிராக்கர்' என்ற தலைப்பில், முதல் கட்ட கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 'எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது' என, கூறப்பட்டுள்ளது.நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏழு மாநிலங்களில் உள்ள, 232 தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என, இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள்:
கர்நாடகா:
காங்., 10 - 18 இடங்களையும், பா.ஜ., 6 - 10 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மொத்த தொகுதி, 28.
கேரளா: காங்., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி, 12 - 18 இடங்களிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி, 2 - 8 இடங்களிலும் வெற்றி பெறும். மொத்த தொகுதி, 20.
ஆந்திரா: இங்கு காங்., - பா.ஜ.,வை விட, மாநிலக் கட்சிகளுக்கே செல்வாக்கு அதிகம் உள்ளது. ஜெகன்மோகன் தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சிக்கு, அதிகப்படியாக, 11 - 19 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு, 9 - 15 இடங்கள் கிடைக்கும். காங்கிரசுக்கு, 4 - 8 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு, 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்த தொகுதி, 42.

இதேபோல், மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., ஒடிசாவில், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன. இரண்டு மாநில தொகுதிகள், தலா, 42 மற்றும் 21.
பீகாரில், பா.ஜ.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம். இங்கு, ஆளும் ஐக்கிய ஜனதா தளம், 7 - 13 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். பா.ஜ., 16 - 24 இடங்களில் எளிதாக வெற்றி பெறும். மொத்த தொகுதி, 40.இவ்வாறு கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தயவு:

இந்த கருத்துக் கணிப்பில், 'மத்தியில் ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ., - காங்., ஆகிய இரு தேசிய கட்சிகளுமே, தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளின் தயவை எதிர்பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்' என, கூறப்பட்டுள்ளது.
வட மாநிலம் :

'வட மாநிலங்களில், பெரும்பான்மை இடங்களில் எந்தக் கட்சி வெற்றி பெறுமோ, அக்கட்சி எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், அங்கும், முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்., போன்ற கட்சிகளுக்கு அதிக ஓட்டு வங்கி இருப்பதால், லோக்சபா தேர்தல் முடிவுகள், இரு தேசிய கட்சிகளுக்கும் சாதகமாக அமையாமல், தொங்கு பார்லிமென்ட் ஏற்படும்' என, கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யாருக்கு வெற்றி?

ஐ.பி.என்., தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'அ.தி.மு.க., 15 - 23 இடங்களிலும், தி.மு.க., 7 - 13 இடங்களிலும் வெற்றி பெறலாம்; காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற கட்சிகள், 4 - 10 இடங்களை பிடிப்பதற்கான வாயப்புகள் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது.

Comments