கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி
கூட்டணி கட்சியினர், காங்., சார்பில், ராஜ்யசபாவுக்கு நிறுத்தப்பட்டுள்ள
சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
மேற்கு
வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி
நடக்கிறது. மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி கட்சியினர்,
எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளனர்.
கருத்து வேறுபாடு:
கடந்த
சட்டசபைத் தேர்தலில், காங்., கட்சி, திரிணமுல் காங்.,குடன், கூட்டணி
அமைத்து போட்டியிட்டது. பின், கருத்து வேறுபாடு எழுந்ததை அடுத்து, காங்.,
கூட்டணியிலிருந்து, திரிணமுல் விலகியது. தற்போது, காங்., எந்த
கூட்டணியிலும் இடம் பெறாமல், தனியாக உள்ளது. இந்நிலையில், மேற்கு
வங்கத்திலிருந்து, புதிதாக, ஐந்து உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான
தேர்தல், அடுத்த மாதம், 7ல் நடக்கிறது. சட்டசபையில், ஆளும் கட்சியான
திரிணமுலுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, அந்த கட்சி
சார்பில், மூன்று பேரை, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும். இடதுசாரி
கூட்டணி கட்சியினருக்கு, சட்டசபையில், 61 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இதன்படி, ராஜ்யசபாவுக்கு, ஒரு உறுப்பினரை அந்த கட்சியால் தேர்வு செய்ய
முடியும். இது தவிர, மேலும், 12 எம்.எல்.ஏ.,க்கள், அந்த கூட்டணிக்கு
கூடுதலாக உள்ளனர்.
திடீர் பரபரப்பு:
இந்நிலையில்,
காங்., கட்சி, சுயேச்சை உறுப்பினர் ஒருவரை, ராஜ்யசபாவுக்கு வேட்பாளராக
நிறுத்தியுள்ளது. தங்களிடம், கூடுதலாக உள்ள, 12 எம்.எல்.ஏ.,க்களும், இந்த
சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பர் என, மார்க்சிஸ்ட் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டுக்கும், காங்கிரசுக்கும் ஏற்பட்டுள்ள
இந்த உடன்பாடு, மேற்கு வங்க அரசியலில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜிக்கு
நெருக்கடி கொடுப்பதற்காகவே, காங்கிரசுடன், மார்க்சிஸ்ட் கை கோர்த்துள்ளதாக,
தகவல் வெளியாகியுள்ளது.
Comments