அம்மா பிச்சை போடுங்க! ஒரு நாளைக்கு ரூ.600 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்

பீகாரில் பிச்சைக்காரர்களின் ஒரு நாள் வருமானம் ரூ.600 என்று அரசு நடத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

பீகார் மாநில அரசு பிச்சைக்காரர்களை கவனித்து கொள்வதற்கு என்றே ஒரு தனி துறையை ஏற்படுத்தி, அவர்கள் குறித்த சர்வேயை நடத்தியும் அசத்தி உள்ளது.

இது தொடர்பாக சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் மாநிலத்தில், ‘முதல்வரின் பிச்சைக்காரர்கள் நல நிவாரண’ திட்டத்தை, சமூக நலத் துறை அமைச்சர் பர்வீன் அமானுல்லா தொடங்கி வைத்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், பீகார் மாநிலத்தில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு ‘முதல்வரின் பிச்சைக்காரர்கள் நல நிவாரண திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கமே, பீகாரில் உள்ள பிச்சைக்காரர்களின் பாதுகாப்பு மற்றும் பிச்சைக்காரர்களின் உரிமையை பாதுகாப்புதுதான். இதற்காக சமூக நலத்துறையில் ‘சாக்ஷேம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பிச்சைக்காரர்களின் நலனை முன்னிறுத்தி செயல்படும்.

சமீபத்தில் முதல்வரின் பிச்சைக்காரர்கள் நிவாரண திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனத்தை கொண்டு பீகாரின் பாட்னா மற்றும் கயா ஆகிய மாவட்டங்களில் பிச்சைக்காரர்களிடம் ஒரு சர்வே நடத்தப்பட்டது.

கயாவில் 2,356 பிச்சைக்காரர்களிடமும், புத்த கயாவில் 2,223 பிச்சைக்காரர்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் பாட்னாவில் மட்டும் குறைந்தபட்சம் 15 பேர் மெட்ரிக் கல்வியை முடித்தவர்கள், ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். கயாவில் 2 பேர் மெட்ரிக் கல்வியை முடித்துள்ளனர்.

பாட்னாவில் மட்டும் 300 பேருக்கு பிச்சையின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 200 முதல் 600 வரை வருமானம் கிடைக்கிறது. கயாவில் 18 பேருக்கு ஒரு நாளைக்கு பிச்சையின் மூலம் தினந்தோறும் 500 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றனர்.

இந்த மாவட்டங்களில் பிச்சை எடுப்பது, அவர்களை பொறுத்தவரை கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அவர்கள் தினந்தோறும் வாழ்க்கையை நடத்துவதற்கே போராடவேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு தேவையான எதுவும் கிடைக்காமல் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

கயா மாவட்டத்தில் 87 சதவிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களாகவே உள்ளனர். அதில் 179 பேர் மாற்றுத் திறனாளிகள், 54 பேர் தொழுநோயாளிகள். இதில் படித்துள்ள 105 பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.25க்கு மேல் இருக்கிறது.

இதில், 1509 பேர் பெண்களும், 847 பேர் ஆண்களும் அடங்குவர். இவர்களில் 388 பேருக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாட்னா மாவட்டத்தில் 60 பிச்சைக்காரர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக உள்ளனர்.

இத்தொழிலில் 1514 இந்துக்களும், 709 முஸ்லிம்களும் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக 945 பிச்சைக்காரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 302 பேரிடம் ரேஷன் கார்டு உள்ளது.

இதில் 1531 பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு ரூ.55 பெறுகின்றனர். இதுவரை 1500 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 114 பேர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். 40 பேர் ‘பாபா ஆம்தே ஓய்வூதிய’ திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுள்ளனர்.

அவர்களில் 35 பேருக்கு வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இவர்களுக்காக 50 பேர் தங்கும் வசதி கொண்ட மறுவாழ்வு மையத்தை பாட்னாவில் தொண்டு நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Comments