
ஒவ்வொரு ஆண்டும்,
டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ்
அதிகாரிகள் மாநாடு நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு, மூன்று நாள்
மாநாடு, நேற்றுமுன்தினம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல்
கவிஞர் மாளிகையில் துவங்கியது.
நேற்றுமுன்தினம், கலெக்டர்கள், போலீஸ்
அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைமை
தாங்கினார். அமைச்சர்கள், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள்,
எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கலந்து கொண்டனர். இரண்டாம்
நாளான, நேற்றைய கூட்டத்தில், கலெக்டர்கள் மட்டும் பங்கேற்றனர். போலீஸ்
அதிகாரிகள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்து
கொண்டவர்களுக்கு, சென்னையில் பிரபலமான, தாஜ் ஓட்டலில் இருந்து, சைவ மற்றும்
அசைவ உணவு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை உணவாக, கேசரி, இட்லி,
பொங்கல், மெதுவடை, ஊத்தப்பம், பூரி, டீ, காபி வழங்கப்பட்டது. மதிய உணவாக,
அசைவம் சாப்பிடுவோருக்கு, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, மட்டன் வருவல்,
மீன் வருவல், முட்டை வழங்கப்பட்டது. சைவம் சாப்பிடுவோருக்கு,
'எக்ஸிகியுட்டிவ் ஹை மீல்ஸ்' மற்றும், 'மினி மீல்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, சப்பாத்தி, பரோட்டா அங்கேயே சுடச்சுட தயாரித்து வழங்கப்பட்டது.
அனைவருக்கும் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டது. மாலை பட்டாணி, சுண்டல், டீ, காபி,
வழங்கப்பட்டது. இடையில், பிஸ்கட், டீ, காபி வழங்கப்பட்டது. மாநாட்டில்
கலந்து கொண்டோர், தங்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,
கலெக்டர்களின் உதவியாளர் போன்றோருக்கு, 'அஞ்சப்பர்' உணவகத்தில் இருந்து
வரவழைக்கப்பட்ட, பிரியாணி பொட்டலம் மட்டும் வழங்கப்பட்டது. அசைவம்
சாப்பிடாதவர்களுக்கு, சரவணபவன் ஓட்டல் உணவு வழங்கப்பட்டது. உணவுக்கு
மட்டும், லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்கு 'அக்வாபினா'; ஆம் ஆத்மிகளுக்கு 'அம்மா குடிநீர்':
கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், கலந்து கொண்ட ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு குடிநீருக்காக, 'அக்வாபினா' மினரல்வாட்டர்
பாட்டில்கள் வழங்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில்
தயாரிக்கப்படும் குறைந்த விலையிலான, 'அம்மா குடிநீர்' பாட்டில் வழங்காமல்,
தனியார் நிறுவனமான, 'அக்வாபினா' குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது. சாதாரண
மக்களுக்கு அம்மா குடிநீர், அதிகாரிகளுக்கு அக்வாபினா குடிநீரா என, அவர்கள்
பேசிக் கொண்டனர். அக்வாபினா குடிநீர் பாட்டிலை வினியோகம் செய்யும்
பொறுப்பை ஏற்ற நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் 100
ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யும். அம்மா குடிநீர் பாட்டில் விலை 10
ரூபாய் தான்.
Comments