வாஷிங்டன்: மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை துவக்குவதில், சர்வதேச
நாடுகளின் பொறுமையை இலங்கை அரசு சோதிக்க கூடாது, விரைவில் நியாயமான,
வெளிப்படையான விசாரணையை துவக்க வேண்டும் என்று அமெரிக்க எச்சரித்துள்ளது.
கேமரூன் நேரடி எச்சரிக்கை:
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த போரில், மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், 'வரும் மார்ச் மாதத்திற்குள், இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்படும்,' என அதிபர் ராஜபக்சேவை நேரடியாகவே எச்சரித்தார்.
ஆனால், 'இலங்கை இன்னமும் காலனி நாடல்ல என்றும், இங்கிலாந்தின் கோரிக்கையை ஏற்க முடியாது' என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட மற்ற முக்கிய தலைவர்கள் கூறி, கேமரூனின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும், தனது கருத்தை ஒரு பத்திரிகை கட்டுரை மூலம் டேவிட் கேமரூன் மீண்டும் ஆணி்த்தரமாக வலியுறுத்தினார்.
அமெரிக்காவும் எச்சரிக்கை:
பொறுமைக்கும் எல்லை உண்டு:
இது குறித்து அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் கூறி உள்ளதாவது:
இலங்கையில் நடந்த மனித மீறல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்
என்றும், மீள் குடியேற்றத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவும்,
சர்வதேச அளவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
இந்த விஷயத்தில் இலங்கை அரசு என்ன செய்கிறது என்பதை அறிய, அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் நேரில் பார்வையிட விரும்புகின்றன. இலங்கை தானாகவே மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை துவக்கும் என்று நம்புகிறோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கை இந்த விஷயத்தில் உறுதியான, வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். செய்யாவிட்டால், இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் பொறுமை மிகவும் குறைந்துவிடும் என்பதை இலங்கை அரசு உணர வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறி உள்ளார்.
Comments