ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சோனியா அதிருப்தி

புதுடில்லி: 'ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்; ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இந்தப் பிரச்னையில், பார்லி., உரிய நடவடிக்கை எடுக்கும் என, நம்பு கிறேன்' என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.

ரத்து:

டில்லியில், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'வயதுக்கு வந்த இருவர், முழு சம்மதத்துடன், ஓரினச் சேர்க்கையில்,
தங்கள் அறைக்குள் ஈடுபடுவது தவறல்ல' என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பால், நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதமும் அளிக்க வேண்டும். அதை, பார்லி., செய்யும் என, நம்புகிறேன். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிக் காக்க, நம் அரசியல் சட்டத்தில், உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவாதத்தை மீறும் வகையிலான, சட்ட பிரிவு செல்லாது என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அதை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது, அதிருப்தி அளிக்கிறது. இவ்வாறு, அறிக்கையில் சோனியா கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: ஓரினச் சேர்க்கை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்து உள்ள தீர்ப்பு தவறானது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மாற்றி அமைப்பதற்கான, அனைத்து வாய்ப்புகள் குறித்தும், ஆய்வு செய்யப்பட வேண்டும்.


மறு ஆய்வு:

தற்போதைய சமூக நிலவரங்களை கவனத்தில் கொள்ளாமல், சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, அதிருப்தி அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு அல்லது குறை தீர் மனுவை, மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், கூடுதல் நீதிபதிகள் பெஞ்சின் விசாரணைக்கு, இந்த விவகாரத்தை பரிந்துரை செய்யும்படி கோர வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர், கபில்சிபல் கூறியதாவது: 'ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம்' என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்றி அமைக்க, மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதற்கான, அனைத்து வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, குறை தீர் மனு தாக்கல் செய்யப்படும். இந்தப் பிரச்னையில், எந்த வழியில், விரைவில் தீர்வு கிடைக்குமோ, அதை அரசு பின்பற்றும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

Comments