லோக்சபா தேர்தலில் - மாவட்டச் செயலர்களுடன் நாளை தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை

லோக்சபா தேர்தலில், எந்தந்த கட்சிகளுடன் கூட்டு சேரலாம் என்பது குறித்து, சென்னையில் நாளை, மாவட்டச் செயலர்களுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார். அதற்கு அடுத்த நாள், பொதுக்குழுவைக் கூட்டி, புதிய கூட்டணிக்கான வியூகத்தை முடிவு செய்கிறார்.


"காங்கிரசுக்கு எதிர்ப்பு; பா.ஜ.,வுக்கு வரவேற்பு' என, இரண்டு வித கருத்துக்கள், தி.மு.க.,வில் எழுந்துள்ள நிலையில், பொதுக்குழு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி விவாதிப்பதற்காக, தி.மு.க., பொதுக்குழு, சென்னையில், 15ம் தேதி கூடுகிறது. அதற்கு முன், 14ம் தேதி, மாவட்டச் செயலர்களை அழைத்துப் பேச, தி.மு.க., தலைவர் கருணாநிதி, திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, 14ம் தேதி காலை, சென்னை வருமாறு, மாவட்டச் செயலர்களுக்கு அவசர அழைப்பு விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அன்று காலை, அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில், கூட்டணி வியூகம் அமைப்பது குறித்து, மாவட்டச் செயலர்களின் கருத்தை, கருணாநிதியும், கட்சி பொருளாளர் ஸ்டாலினும் கேட்க உள்ளனர்.

மாலையில், கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' நூலின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா நடக்கிறது.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முதலில், பொதுக்குழுவும், நூல் வெளியீட்டு விழாவும் தான் ஏற்பாடு செய்யப்பட்டது. நூல் வெளியீட்டு விழாவுக்கு எப்படியும் மாவட்டச் செயலர்கள் வருவர். பொதுக்குழுவுக்கு முன், கூட்டணி குறித்து, அவர்களின் கருத்தை அறிய வேண்டும் என, கட்சித் தலைமை விரும்பியது. குறிப்பாக நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்ற, முக்கியமான மாவட்டச் செயலர்களின் கருத்தை அறிய வேண்டும் என, தலைமை நினைக்கிறது. அவர்களின் கருத்தை அறிந்து, அதன்படி, பொதுக்குழுவில் பேசுதற்கான பொருள், முடிவு செய்யப்பட உள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. முக்கியமான, மூத்த மாவட்டச் செயலர்களை அழைக்கலாம் என, முடிவெடுத்துள்ளது தலைமை. அனேகமாக, தகவல் தெரிந்து, எல்லா மாவட்டச் செயலர்களும், 14ம் தேதி காலை, சென்னையில் இருப்பர் என்றே நம்புகிறோம். அன்று காலை, அறிவாலயத்தில், அவர்களுடன் கருணாநிதியும், ஸ்டாலினும் ஆலோசனை நடத்துகின்றனர். பொதுவாக, கூட்டணி விஷயத்தில், மாவட்டச் செயலர்களில் பெரும்பாலானோர், ஸ்டாலின் கருத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். ஸ்டாலின் என்ன விரும்புகிறாரோ, அதையே செயல்படுத்தும் நிலையில் உள்ளனர். அதனால், கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் கருத்தையே, அவர்கள் எதிரொலிப்பர் என்பது உண்மை. ஸ்டாலினை பொறுத்தவரையில், காங்கிரசுடன் கூட்டு சேர விரும்பவில்லை. "தே.மு.தி.க.,வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்யலாம். கடைசி நேரத்தில், காங்கிரஸ் வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்; இப்போதே அவர்களுடன் பேச வேண்டாம்' என, கூறி வருகிறார்.

நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. நான்கு மாநில தேர்தல் முடிவுகள், அதைத் தான் காட்டியது. எனவே, காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால், அந்த அலையில், தி.மு.க.,வும் பாதிக்கப்படுவது உறுதி. எனவே, காங்கிரஸ் இல்லாமல், கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும். அது முடியாமல் போனால், தற்போதுள்ள கட்சிகளை வைத்துக்கொண்டு, தேர்தலை சந்திக்கலாம் என்பதே, ஸ்டாலின் நிலைப்பாடு. அதையே, மாவட்டச் செயலர்கள், பொதுக்குழுவிலும், நாளைய ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்துவர்.

ஆனால், கட்சித் தலைவரை பொறுத்தவரையில், காங்கிரசை ஒரேயடியாக ஓரங்கட்டும் மனநிலையில் இல்லை. சோனியா பிறந்த நாளன்று, முதலில், தி.மு.க., சார்பில் யாரும் வாழ்த்து சொல்ல போகவில்லை. பகல், 12:00 மணியளவில், திடீரென்று, டி.ஆர்.பாலுவை கூப்பிட்டு பேசிய கருணாநிதி, எல்லா எம்.பி.,க்களுடன் சென்று, சோனியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். இதிலிருந்து, அவர் இன்னமும் காங்கிரசை ஒதுக்க மனமில்லாமல் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையில், ஸ்டாலின் கருத்துக்கு, கட்சியில் உள்ள சீனியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். "காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டாம் என கூறுவது சரி. ஆனால், தேசிய அளவில் என்ன நிலை' என, பொதுக்குழுவில் அவர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்."காங்கிரசுக்கு பதிலாக, பா.ஜ.,வுடன் கூட்டு சேருவதில், என்ன தவறு இருக்க முடியும்' என, இப்போதே, அவர்கள், கட்சித் தலைமையிடம் கேட்கத் துவங்கி விட்டனர். அதிலும், சமீபத்திய வெற்றி, மோடி ஆதரவு அலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அவர்கள், பா.ஜ.,வுடன் கூட்டு சேரலாம் என, யோசனை சொல்கின்றனர். குறிப்பாக, டி.ஆர்.பாலு, ராஜா, துரைமுருகன் போன்றோர், பா.ஜ.,வுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றனர்.

பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்தால், சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்காமல் போய் விடும் என்று, அதற்கு ஸ்டாலின் தரப்பினர், பொதுக்குழுவில் எதிர்ப்புக்கொடி பிடிக்க தயாராக இருக்கின்றனர். இது பற்றி, மாவட்டச் செயலர்கள் கூட்டத்திலும், பொதுக்குழுவிலும் சூடான விவாதம் கிளம்பும். அதற்கு பிறகே, கட்சியின் கூட்டணி வியூகம் முடிவாகும். இவ்வாறு, அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments