பார்சிலோனா: பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் மகள் திருமணம்,
ஸ்பெயின் நாட்டில், 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது. அமெரிக்க வாழ்
இந்தியரான லட்சுமி நிவாஸ் மிட்டலின், இளைய சகோதர் பிரமோத் மிட்டல்; இவரது
மகள், சிருஷ்டி, 26, யின் திருமணம், கடந்த, 7ம் தேதி, ஸ்பெயின் நாட்டின்,
பார்சிலோனா நகரில் நடந்தது. இந்த திருமணத்தில், மிட்டல் குடும்பத்தினர்
மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.,க்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஸ்பெயின்
நாட்டின், வரலாற்று சிறப்புமிக்க, அருங்காட்சியக அரங்கில், மூன்று நாட்கள்
இந்த திருமணம் நடந்தது.திருமண நிகழ்ச்சிகள் முழுவதையும், வீடியோ மற்றும் போட்டோ எடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த திருமணத்தையொட்டி, அப்பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தில், பார்சிலோனா நகர மேயரும் கலந்து கொண்டார். இந்திய கோடீஸ்வரர், அமித் பாட்டியாவுடன் நடந்த, மிட்டலின் மகள் வனிஷாவின் திருமணத்திற்கு, 240 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், தற்போது, அவரது சகோதரர் மகள் திருமணத்திற்கு, 503 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
Comments