பெங்களூர்:செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலைகள்
உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை
இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது. பி.எஸ்.எல்.வி-25 ராக்கெட் மூலம்
விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த விண்கலம் இஸ்ரோ தயாரித்து உள்ளது.
இந்த
விண்கலத்தை வருகிற 28-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்
விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள ஏவுதளத்தில் விண்கலத்தை அனுப்புவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து
வருகிறது.
மோசமான வானிலையால் தாமதம்:'
மங்கள்யான்'
விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான தேதி நேற்று முடிவு செய்து
அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தெற்கு பசிபிக் கடலில் நிலவும் மோசமான
வானிலை காரணமாக மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் தேதி தள்ளி
வைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். விண்கலம்
ஏவுவதற்கான அதிகார வாரியம் வருகிற 22-ந்தேதி மீண்டும் ஒரு முறை கூடி,
விண்கலத்தை ஏவுவதற்கான தேதியை முடிவு செய்து அறிவிக்கும் என்றும் அவர்
கூறினார். இதனால் 'மங்கள்யான்' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு மேலும்
ஒரு வாரம் தாமதம் ஆகும்.
முதல் முறையாக 2 கப்பல்கள்:
'மங்கள்யான்'
விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விண்ணில் பயணம் தொடங்குவதை ஆய்வு
செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு பசிபிக் கடலுக்கு கடந்த
செப்டம்பர் மாதம் மத்தியில் எஸ்.சி.ஐ. யமுனா, எஸ்.சி.ஐ. நாலந்தா ஆகிய 2
கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தகவல் தொழில்நுட்ப கருவிகளுடன் சென்ற அந்த
கப்பல்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு
பசிபிக் கடலில் நிலைநிறுத்தப்பட வேண்டிய இலக்கை இன்னும் அடையவில்லை. மேலும்
அங்கு நிலவும் மோசமான வானிலையும் விண்கலத்தை ஏவுவதில் தாமதத்தை ஏற்படுத்தி
உள்ளது. மற்றபடி விண்கலம் மற்றும் ஏவுவாகனம் எல்லாம் தயார் நிலையில்
உள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Comments