மும்பை: 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக
ஓய்வு பெறப் போவதாக லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. தனது ஓய்வு
முடிவை வாரியத்திடம் சச்சின் தெரிவித்துள்ளார் என்று அது கூறியுள்ளது.
கவாஸ்கரின் வாரிசாக புகழப்பட்ட சச்சின், இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம்
மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடி 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை சச்சின்
பெறவிருக்கிறார்.
ஏற்கனவே ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள், ஐபிஎல், சாம்பியன்ஸ்
லீக் என அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார்
சச்சின். டெஸ்ட் மட்டுமே பாக்கி இருந்தது. அதுகுறித்த எதிர்பார்ப்புகளும்,
விவாதங்களும், கேள்விகளும் எழுந்தவண்ணம் இருந்தன.
இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற முடிவு செய்து
விட்டார் சச்சின். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து
ஓய்வு பெறப் போவதாக சச்சின் தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு
வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த ஓய்வின் மூலம் இந்திய கிரிக்கெட்டில் சச்சினின் சகாப்தம்
மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட்டிலும் மிகப் பெரிய சகாப்தம் ஒன்று
முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments