கராச்சி : பாகிஸ்தான் சிறையில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ஜெயிலில்
புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 250 கைதிகளை மீட்டு
சென்றதால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.இது போன்று தாக்குதல் நடத்தி கைதிகள் அதிகம் தப்பியது இதுவே முதன்முறையாகும். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்கும் படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் போல உடை :
பாகிஸ்தானின்
வட மேற்கு பகுதியான தேரா இஸ்மாயில்கான் என்ற பகுதியில் உள்ள மத்திய
சிறையில் சுமார் 5 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 100
க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் திடீர்
தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினருக்கும்,
பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கராவதிகள்
அனைவரும் போலீஸ் போல உடை அணிந்து வந்தனர். கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.
இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாக
தெரிகிறது.
தாக்குதலை பயன்படுத்தி சிறையில் இருந்த முக்கிய கைதிகள் 250 க்கும்
மேற்பட்டோர் தப்பி ஓடினர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்பை
சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் சிறையில நடந்த தாக்குதல்
சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தியது நாங்களே :
இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஷாஹித்துல்லா தொலைபேசி மூலம் ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; இந்த தாக்குதலை நடத்தியது நாங்களே , முக்கிய தலைவர்கள் சிலரை விடுவித்துள்ளோம், இதற்கென தற்கொலை படையினர் சிலரையும் அனுப்பி வைத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு துறையினர் கூறுகையில்:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று
உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இருப்பினும் போலீஸ் உடையில்
பயங்கரவாதிகள் வந்ததால் போலீசாரால் உறுதிப்படுத்த முடியாமல் போனது என்றனர் .
தாக்குதலின்போது
பயங்கரவாதிகள் சில கைதிகளின் பெயரை கூறி வெளியே வாருங்கள் என கூவி
குறிப்பிட்ட நபர்களை அழைத்து சென்றனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தப்பியவர்களில் 25 பேர் கொடூர குற்றவாளிகள் என தெரிய வருகிறது.
Comments