கார் தயாரிப்புக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுது கார்களுக்கென பிரத்யேக
டிசைனை கைவசம் வைத்துள்ளன. பார்த்தவுடனே இது இந்த நிறுவனத்தின் தயாரிப்பு
என்று கூறும் அளவுக்கு டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதேபோன்று,
தங்களது நிறுவனத்தின் செழிப்பையும், வடிவமைப்பு ஆற்றலையும் உலகுக்கு
பரைசாற்றும் வகையில் பிரத்யேக டிசைன் கொண்ட கட்டிடங்களை தங்களது
அலுவலகமாகவோ அல்லது இதர பயன்பாட்டு மையங்களாகவோ வைத்துள்ளன. இந்த
தொகுப்பில் சில முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் பிரத்யேக வடிவமைப்பு
கொண்ட கட்டிடங்களை சுவாரஸ்யமான தகவல்களுடன் காணலாம்.
பிஎம்டபிள்யூ தலைமையகம்
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பாளரான
பிஎம்டபிள்யூவின் தலைமையகம் ஜெர்மனியிலுள்ள மூனிச் நகரில் அமைந்துள்ளது.
நாணயங்களை அடுக்கியது போன்று காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 4 உருளைகளை
ஒன்றாக நிற்க வைத்தது போன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1968ம்
ஆண்டு துவங்கி 1972ல்
முடிந்ததாலும் 1973ம் ஆண்டு திறக்கப்பட்டது. 331 அடி உயரமும் 171 அடி
அகலமும் கொண்டது. 22 மாடிகளை கொண்டது. இந்த கட்டிடத்தை ஆஸ்திரியவை
சேர்ந்த பிரபல கட்டிட வடிவமைப்பு வல்லுனர் கார்ல் சுவான்ச்சர்
வடிவமைத்தார். இந்த கட்டிடம் பாதுகாக்கப்பட்ட புராதன கட்டிடமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.மெக்லேரன்
இங்கிலாந்திலுள்ள வோக்கிங் என்ற இடத்தில்
மெக்லேரன் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. அரை வட்ட நிலா
வடிவ கட்டிடமும், மீதமுள்ள பகுதி நீர் தேக்கம் கொண்டதாக
அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரை வெப்ப குறைப்பான் கருவி வழியாக கட்டிடடம்
மற்றும் சோதனையின்போது புரொப்பல்லர்களிலிருந்து வெளியேறும் வெப்பத்தை
குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு பணி பிரிவும் 18 மீட்டர் அகலம் கொண்ட ஹால்களாக
தடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வசதிக்காக இந்த கட்டிடத்தில் 700 பேர்
அமர்ந்து சாப்பிடும் வசதிகொண்ட ரெஸ்டாரன்ட், ஜிம், நீச்சல் குளம் ஆகியவை
இருக்கின்றன. கீழ் தளம் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1999ம்
ஆண்டு 4,000 தொழிலாளர்களுடன் கட்டுமானப் பணிகள் துவங்கியது. 2003 முதல்
இந்த மையத்தில் பணியாளர்கள் பயன்படுத்தினாலும், 2004ம் ஆண்டு இரண்டாம்
எலிசபெத் ராணி முறைப்படி திறந்து வைத்தார்.
அபுதாபி ரோல்ஸ்ராய்ஸ் தலைமையகம்
பெளர்ணமியன்று பால் வண்ண நிலவுக்கு பதில் தங்க
கீற்றுகளுடன் கருப்பு நிலா அடிவானில் இருந்து கிளம்பும்போது
எப்படியிருக்கும் என்ற கற்பனையை தூண்டுகிறது இரவு நேரத்தில் விளக்கொளியில்
மின்னும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அபுதாபி தலைமையக கட்டிடம். அபுதாபி
சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த கட்டிடம் அபுதாபிக்கு
புதிய அடையாளமாக கூறலாம். பிரபல அல்டார் கட்டுமான நிறுவனம் இந்த
கட்டிடத்தை வடிவமைத்து கட்டியுள்ளது.ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகம்
அமெரிக்காவின் டெட்ராய்டில் நதிக்கரையோரம்
வானுயர்ந்து நிற்கிறது ஜெனரல் மோட்டார்ஸ் சர்வதேச தலைமையகம். 7 உயரமான
கட்டிடங்கள் இணைந்து ரென்சென் மையம் என்று குறிப்பிடப்படும் இந்த
அடுக்குமாடி வளாகத்தில் முதன்மை கட்டிடத்தை கடந்த 1996ல் ஜெனரல் மோட்டார்ஸ்
வாங்கியது. இந்த கட்டிடம் 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. மிக்சிகன்
மாகாணத்தில் மிக உயரமான கட்டிடம் என்ற பெயரையும் இதுவரை தக்கவைத்து
வருகிறது.இந்த கட்டிடத்திற்கு ஜான் போர்ட்மேன் முதன்மை வடிவமைப்பாளராக இருந்தார். 2004ம் ஆண்டு பெரும் தொகை செலவில் இந்த கட்டிடத்தை ஜிஎம் புனரமைத்தது. இந்த மொத்த அடுக்குமாடி வளாகம் 5,552,00 சதுர அடி பரப்பு கொண்டது. ஜெனரல் மோட்டார்ஸ் தவிர ஏராளமான நிறுவனங்கள் செயல்படும் இந்த ஒட்டுமொத்த வளாகமும் உலகின் மிகப்பெரிய வர்த்தக வளாகங்களி்ல் ஒன்றாக விளங்குகின்றன.
அபுதாபி ஃபெராரி வேர்ல்டு
உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு
பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால்
நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை,
அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக
இருக்கின்றன.இந்த கட்டிடத்தையும் அல்டார் கட்டுமான நிறுவனம்தான் கட்டியது. இந்த பூங்காவின் கூரை 2,152,782 சதுர அடி பரப்பு கொண்டது. 164 அடி உயரத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் விளையாட்டு இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது.

Comments