மதுரையில் சைக்கிள் "டைம்பாம்' வெடித்தது : அத்வானி வருகைக்கு எதிர்ப்பா என விசாரணை

மதுரை :மதுரை அண்ணாநகர் குப்தா ஆடிட்டோரியம் ராமர் கோயிலை யொட்டி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சைக்கிள் "டைம்பாம்' வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமில்லை. மே 10, 11ல் மதுரையில் நடக்கும் பா.ஜ., மாநில மாநாட்டிற்கு, அத்வானி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, "டைம்பாம்' வெடிக்கப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்ணாநகர் தேவநேய பாவாணர் மணிமண்டபம் எதிரே உள்ள ரோட்டில், குப்தா ஆடிட்டோரியம் உள்ளது. இந்நிர்வாகத்திற்குட்பட்ட "ஸ்ரீராம் கோயில்' பிளாட்பாரத்தில், கடந்த ஏப்.,26 முதல், சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் டூவீலருக்குரிய புதிய கருப்பு நிற பெட்டியும், புது பூட்டும் பொருத்தப்பட்டிருந்தது. ஐந்து நாட்களாக இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, வெடிச்சத்தம் கேட்டது. கோயில் வாட்ச்மேன் தத்தநேரியைச் சேர்ந்த மூக்கையா,70, எழுந்து பார்த்தார். அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டயர் ஏதாவது வெடித்திருக்கலாம் எனக்கருதி, மீண்டும் தூங்கினார். காலை எழுந்து பார்த்தபோது, சைக்கிளில் மாட்டப்பட்டிருந்த பெட்டி சிதறி கிடந்தது. அருகில் திரி, சணல், கரிமருந்து, பேட்டரிகள் கிடந்தன.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு :போலீசார் ஆய்வு செய்ததில், நான்கு சிறு கடிகாரம், டார்ச் லைட்டிற்கு பயன்படும் 5 பேட்டரிகள், கரிமருந்தை சூடாக்க நான்கு "91 பேட்டரிகள்' இருந்தன. நேரத்தை "செட்' செய்து, வெடிக்கும் வகையில், இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்தாண்டு, மதுரை மாட்டுத்தாவணி எதிரே டாஸ்மாக் கடையில் இதே போன்று "டைம்பாமை' வெடித்தது. கடந்த செப்.,30ல் புதூர் அரசு பஸ் டெப்போவிலும், டிச.,7ல் திருவாதவூர் அரசு டவுன் பஸ்சிலும் கண்டெடுக்கப்பட்ட "டைம் பாம்' இதே முறையில் உருவாக்கப்பட்டவை, என்கின்றனர் போலீசார்.ஏப்., 28ல், ராமர் கோயில் பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம், மர்ம சைக்கிள் குறித்து கோயில் நிர்வாகிகள் தெரிவித்தபோது, "பக்கத்துல துணி தேய்க்கிறவருடையதாக கூட இருக்கலாம். யாரும் கேட்காத பட்சத்தில், ஸ்டேஷனிற்கு எடுத்துச் செல்கிறோம்' என்றனர். பின், அதைபற்றி போலீஸ் கண்டுகொள்ளாத நிலையில் தான் "டைம்பாம்' வெடித்துள்ளது. கோயில் அருகில் "டைம்பாம்' வைக்கப்பட்டது குறித்து, ஏப்.,29ல் சில பத்திரிகையாளர்களுக்கு மர்மநபர் ஒருவர் போனில் தகவல் தெரிவித்துள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மே 10, 11ல் மதுரையில் நடக்கும் பா.ஜ., மாநாட்டிற்கு, மூத்த தலைவர் அத்வானி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், "டைம்பாமை' வெடிக்க செய்திருக்கலாம் எனவும், நேற்று வெடிக்கும் வகையில், ஏப்.,26ல் "செட்' செய்து வைத்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து, பா.ஜ., மாநாடு பந்தலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அத்வானி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., பாலநாகதேவி, எஸ்.பி., ஆஸ்ராகர்க்குடன் போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் ஆலோசனை நடத்தினார்.

"டைம்' தவறிய "டைம் பாம்':மதுரையில் பா.ஜ., மாநாடு ஏற்கனவே ஏப்., 28, 29ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மாநாடு நடக்கும் நாட்களில் வெடிப்பதற்காக, ஏப்.,26ல் வைக்கப்பட்ட "டைம் பாம்' "டைம்' தவறி மே 1ல் வெடித்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மதுரையில் அடிக்கடி "டைம்பாமை' வெடிக்க செய்வது, பஸ்களில் "செட்' செய்து வைப்பது என தொடர்ந்து சிலர் ஈடுபடுகின்றனர். இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. டாஸ்மாக் பாரில் குண்டுவெடித்தது, புதூர் டெப்போ பஸ்சிலும், திருவாதவூர் பஸ்சிலும் "டைம்பாம்' கண்டெடுத்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த அக்., 28ல் மதுரையில் இருந்து மக்கள் விழிப்புணர்வு ரதயாத்திரை புறப்பட்ட அத்வானியை கொல்ல, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைபாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இவ்வழக்கில், அப்துல்லா, இஸ்மத், ஹக்கீம் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர்.

மாநாட்டை சீர்குலைக்க சதி: பா.ஜ., குற்றச்சாட்டு : மதுரையில், மே 10, 11ல் நடைபெற உள்ள மாநில மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், மதுரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

மதுரை நகர் செயலர் ராஜரத்தினம் கூறியுள்ளதாவது:மதுரையில் நாட்டு வெடிகுண்டு மீண்டும் வெடித்த சம்பவம், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மதுரைக்கு கடந்த முறை அத்வானி வந்தபோது, குண்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக, குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. வெடிகுண்டு வைத்தவர்களின் பின்னணியை கண்டறிந்து, மக்களின் அச்சத்தை மாநில அரசு போக்க வேண்டும்.தற்போது நடைபெற உள்ள மாநில மாநாட்டை நிலைகுலைய செய்ய, நடக்கும் முயற்சியை, பா.ஜ., முறியடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments