கிடைக்குமா கட்டாய வெற்றி *ஆஸி.,யுடன் கடைசி மோதல் *இந்தியாவுக்கு காத்திருக்கு சவால்

சிட்னி: முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்காவது முறையாக மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பைனல் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 8 லீக் போட்டிகளில் பங்கேற்கும். இதுவரை அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் பங்கேற்ற நிலையில், இலங்கை (15 புள்ளி), ஆஸ்திரேலியா (14) அணிகள் பெற்று முதல் இரு இடத்தில் உள்ளன. 10 புள்ளிகள் பெற்ற இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதனிடையே இன்று சிட்னியில் நடக்கும் பகலிரவு போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்காவது முறையாக மோதுகின்றன.
நிலையற்ற பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங்கில், சுழற்சி முறை என்ற பெயரில் "டாப் ஆர்டரில்' நிலையில்லாத தன்மை ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு போட்டியில் காம்பிர், சேவக் இணைந்து 52 ரன்கள் எடுத்தது தான் சிறந்த துவக்கம்.
100வது சதம் அடிக்கும் முயற்சியில் இருக்கும் சச்சின் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். காம்பிர் இருமுறை 90க்கும் மேல் எடுத்து நம்பிக்கை தருகிறார். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி மட்டும் ஆறுதல் தருகிறார். கேப்டன் தோனி அணிக்கு திரும்பி இருப்பது, பலம் தான். பந்துகளை மட்டுமே வீணடிக்காமல் இருந்தால் நல்லது.
பின் வரிசையில் இர்பான் பதான், அதிரடியாக ரன் குவிப்பது ஆறுதல். ரோகித் சர்மா, ரெய்னா ஆகியோர் எப்போது தங்களை நிரூபிப்பர் என தெரியவில்லை. இன்று "டாப்-3' வீரர்கள் பங்கேற்பதால், ரோகித் சர்மா விளையாடாமலே "அவுட்' ஆகலாம்.
பவுலிங் பலவீனம்:
அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. ஜாகிர் கான் கால் காயத்தால் அவதிப்படுகிறார். இத்தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் எடுத்துள்ள வினய் குமார், தொடை காயத்தால் சிக்கலில் உள்ளார்.
பிரவீண் குமார் ஓ.கே., என்றாலும், வேகம் குறைவாக வீசுவது எதிரணிக்கு சாதகம். உமேஷ் யாதவை எடுக்கலாம் என்றால், 4 போட்டியில் 3 விக்கெட் மட்டும் வீழ்த்தி, ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக உள்ளார். வேகத்துக்கு குறை இல்லை என்றாலும், சரியான அளவு மற்றும் இடத்தில் பந்தை "பிட்ச்' செய்யாதது பிரச்னை.
இருப்பினும், உமேஷ் யாதவ், ஆல் ரவுண்டர் இர்பான் பதான் இடம் உறுதி. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக வேறு வழியின்றி பிரவீண் வரலாம். ஒருவேளை "ஆப் ஸ்பின்னர்' ராகுல் சர்மாவும், அஷ்வினுடன் களம் காணலாம்.
பாரஸ்ட் பலம்:
ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஜோடி வார்னர், வேட் தொடர்ந்து கைவிடுவதால், வாட்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும். பாண்டிங் இடத்தில் களமிறங்கிய பாரஸ்ட், 4 போட்டியில் 2 அரைசதம், ஒரு சதம் அடித்து மிரட்டல் பார்மில் உள்ளார். கேப்டன் கிளார்க்கும் பேட்டிங்கில் அசத்துவதால், இன்றும் இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம்.
ஹில்பெனாஸ் வேகம்:
கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் சாய்த்த, வேகப்பந்து வீச்சாளர் ஹில்பெனாஸ், பிரட் லீ, மெக்கே, ஹாரிஸ் கூட்டணியுடன், சுழலில் தோகர்டியும் தொல்லை தர காத்திருக்கிறார்.
வெற்றி முக்கியம்:
இன்று வென்றால் மட்டுமே தொடரில் நிலைத்திருக்கலாம் என்பதால் இந்திய அணி வெற்றிக்கு தீவிரமாக போராடும். அதேநேரம் பைனல் வாய்ப்பை உறுதி செய்ய, ஆஸ்திரேலியாவும் எளிதில் விட்டுத்தராது என்பதால் கடும் போட்டி காத்திருக்கிறது.

தோல்வி அதிகம்
இன்று போட்டி நடக்கும் சிட்னி மைதானத்தில், இந்திய அணி 15 போட்டிகளில் பங்கேற்று 4 ல் மட்டுமே வென்றது. 11ல் தோற்றுள்ளது.
* இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இங்கு மோதிய 12 போட்டிகளில் 11 ல் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. கடைசியாக 2008ல் இங்கு நடந்த போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றது.
* பேட்டிங்கில் இந்திய அணி அதிகபட்சமாக 299 ரன்கள் (எதிர்-ஆஸ்திரேலியா, 2008) எடுத்தது.
* இந்திய அணியின் சச்சின் இங்கு விளையாடிய 7 போட்டிகளில், ஒரு சதம் உட்பட 301 ரன்கள் எடுத்துள்ளார்.

மழை வருமா
சிட்னியில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 27, குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை வர வாய்ப்பு இல்லை.

பிளவா: மறுக்கிறார் தோனி
இந்திய அணியில் தோனி - சேவக் இடையே பிளவு என்ற செய்தி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், ""இதுபோன்ற செய்திகள் வருவது முதன் முறையல்ல. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. "டிரஸ்ஸிங்' அறையில் தலைமுறை இடைவெளி கிடையாது. எல்லாமே சரியாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், "பிளவு' செய்தி குறித்து தெளிவுபடுத்த தேவையில்லை. இத்தொடரில் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று, பைனலுக்கு செல்வதில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.

Comments