பால் விலை, பஸ் கட்டண உயர்வைப் பாராட்டி சங்கரன்கோவிலில் பிரசாரம்..கருணாநிதி கிண்டல்

சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தலைமைச் செயலக இடமாற்றம், அண்ணா நூலக இடமாற்றம் ஆகியவற்றைப் பாராட்டி பிரசாரம் செய்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கிண்டலாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருணாநிதி இன்று அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் எதை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறீர்கள்?

கருணாநிதி: எங்கள் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்பதை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வோம்.

கேள்வி: அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களையெல்லாம் ரத்து செய்துள்ளதே - மேலும், மின்வெட்டு, பால் விலை உயர்வு - பஸ் கட்டணம் உயர்வு இவற்றையெல்லாம் முன்வைத்து பிரச்சாரம் செய்வீர்களா?

கருணாநிதி: அவற்றையெல்லாம் பாராட்டுவோம். பேருந்து கட்டண உயர்வு - தலைமைச் செயலக மாற்றம் - அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம் இவைகளையெல்லாம் பாராட்டி, தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் பால் விலை உயர்த்தினாலும் - பேருந்து கட்டணைத்தை உயர்த்தினாலும் - மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டாலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையிலேயே சொல்லியிருக்கிறாரே. எனவே அதிமுக வெற்றியைத் தடுக்க தி.மு.க. சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தும் திட்டம் இருக்கிறதா?

கருணாநிதி: இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்துள்ளது பற்றி?

கருணாநிதி: ஜனநாயகத்திற்குப் புறம்பான காரியங்கள் மாத்திரமல்ல; ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள், இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு ஒரு உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும் - அட்டூழியங்களும்.

கேள்வி: ஏற்கனவே 1.10 கோடி உறுப்பினர்கள் தி.மு.க. உறுப்பினர்களாக இருக்கிறார்கள். புதிய உறுப்பினர் சேர்த்தலில் எண்ணிக்கை இலக்கு வைத்திருக்கிறீர்களா?

கருணாநிதி: ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை தாண்டுகின்ற அளவிற்கு இருக்கும் என்றார் கருணாநிதி.

Comments