கொலை வழக்கில் தமிழக தொழிலாளிக்கு தூக்கு: சிங்கப்பூர் கோர்ட் தீர்ப்பு

சிங்கப்பூர்:  சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர், தன்னுடன் பணியாற்றி வந்த சக இந்தியரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி தேவராஜன்(20). அவர் சிங்கப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 8ம் தேதி சக இந்தியரான ராஜு அறிவழகன்(31) என்பரைக் கொலை செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார் தேவராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தேவராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிவழகன் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். அங்கு தைப்பூசம் கொண்டாடிய அவரை கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை. இந்நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை போலீசார் அவரது உடலை ஒரு மேம்பாலத்திற்கு அடியில் இருந்து எடுத்தனர்.

Comments