சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் தேர்வு வருகிற 17ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ள கட்சிக்காரர்களை நேர்காணலுக்கு அழைத்துள்ளது திமுக மேலிடம். திமுக தலைவர் கருணாநிதியே நேரடியாக வேட்பாளரைத் தேர்வு செய்யவுள்ளார்.
இதுதொடர்பாக கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், வேட்பாளர் நேர்காணலுக்கு வரும் விருப்ப மனு தாக்கல் செய்தோர், துணைக்கு எந்த ஆதரவாளரையும், வேறு யாருடைய சிபாரிசுடனும் வரக் கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார். இது மு.க.அழகிரிக்கு விதிக்கப்பட்ட மறைமுக தடை என்று கருதப்படுகிறது.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை யாருக்காவது டிக்கெட் தர வேண்டுமானால் பொதுவாக அழகிரியின் ஆலோசனை மற்றும் பரிந்துரையைத்தான் கட்சி மேலிடம் இதுவரை நாடி வந்தது. அழகிரியால் கூட ஆதிக்கம் செலுத்த முடியாத பகுதிகளில்தான் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போதைய சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வேட்பாளர் விஷயத்தில் அழகிரியை ஓரம் கட்ட திமுக மேலிடம் முயல்வதாக கூறப்படுகிறது.
இதனால் 'திருமங்கலம் இடைத் தேர்தல் புகழ்' அழகிரி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
இதற்கிடையே இதுவரை 41 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களில் முன்னணியில் இருப்பவர் ராசையா என்கிற ராஜா என்கிறார்கள். இவர் 1996ம் ஆண்டு அதிமுக வேட்பாளரான கருப்பசாமியிடம் வெறும் 600 ஓட்டுக்களில் தோல்வி அடைந்தார். அன்று முதல் தான் மரணம் அடையும் வரை சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து ஜெயித்து வந்தார் கருப்பசாமி என்பது நினைவிருக்கலாம். எனவே பழைய முகமாகப் பார்த்து களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.
இருப்பினும் ராஜா, அழகிரி ஆதரவாளர் கிடையாதாம். ஆனால் அழகிரி ஆதரவாளரான நெல்லையைச் சேர்ந்த ஜவஹர் சூர்யா என்பவரும் போட்டிக் களத்தில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Comments