சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வியை அக்கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. தற்போது முத்துச் செல்வியும் அதிமுகவினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இலவசப் பொருட்களும் படு ஜரூராக விநியோகிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிமுகவும் தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. அக்கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே சில சுற்று சுற்றுப்பயணத்தை அங்கு முடித்து விட்டார். தொடர்ந்து பேசி வருகிறார்.
தேமுதிகவின் நிலை என்ன என்பது அக்கட்சியினருக்கேத் தெரியவில்லை. இடதுசாரிகள் இங்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை. அதெல்லாம் டைம் வேஸ்ட் என்று தா.பாண்டியன் வேறு நேற்று பேசியுள்ளார்.
இந்த நிலையில் திமுக தனது வேட்பாளர் தேர்வை முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை திமுக வாங்கியுள்ளது.இதையடுத்து வருகிற17ம் தேதி வெள்ளிக்கிழமையன்று விருப்ப மனு தந்துள்ளவர்களிடம் கட்சித் தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தவுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளும், ஒன்றியச் செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments