ஈரோட்டில் ஒரு புதிய மெகா மோசடி : இரட்டிப்பு பணம் ஆசை காட்டி பல கோடிகள் சுருட்டிய கும்பல்

ஈரோடு : தமிழகத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தால் நிறைய தருகிறேன் என்றால்தான் போதுமே ஆசை யாரை விட்டது சுருட்ட நினைப்பவனுக்கு வந்த ஆசை போல போட்ட பணத்திற்கு கூடுதல் தொகை என்றால் விடுவார்களா ஏமாளிகள். இந்த கதியில் தமிழகத்தில் நிதி நிறுவனம் என்ற பெயரில் பலர் பல லட்சங்களை இழந்து வந்துள்ளனர் .
இவ்வாறு ஊர்ப்பணத்தை சுருட்டியவர்கள் எந்த ஊரில் இருக்கின்றனர் என்ற விவரத்தை போலீசார் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர். முறையான சட்டப்படி இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.

கடந்தகால ஊரறிந்த மோசடி வரலாற்றை திருப்பி பார்த்தால் வேலை வாங்கி தருவதாக மோசடி , இன்சூரன்ஸ் பெயரில் , லோன் வாங்கி தருவதில் , மணிலிங், இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு தருகிறேன் என பலவாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்று ஈரோட்டில் ஒரு புதிய மோசடி வெளியே வந்திருக்கிறது. ஆன்லைனில் பணம் செலுத்தி இரட்டிப்பாக தருகிறேன். மாதம் தோறும் செக் தருகிறேன், என ஆசை வார்த்தை கூறி ஈரோட்டை சுற்றிய பகுதியை சேர்ந்தவர்கள் பலர் தற்போது பணத்தை இழந்திருக்கின்றனர்.
 
வாய்ப்பிளந்த ஆசைவாசிகள் : இது குறித்த விவரம் வருமாறு : ஈரோடு பட்டேல் தெருவில் ஜெகோவா அசோசியேட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வரப்பட்டுள்ளது. இதில் பணம் குறைந்தது ரூ 3 ஆயிரம் செலுத்தினால் மாதம்தோறும் தொள்ளாயிரம் ரூபாய்க்கு செக் வரும் என கூறியுள்ளனர். இது போல பணம் போட்டவர்களுக்கு செக் போய்ச்சேர்ந்திருக்கிறது. இதனையடுத்து வாய்ப்பிளந்த ஆசைவாசிகள் தங்கள் உழைப்பில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை செலுத்தியிருக்கின்றனர்.
பலரும் பல லட்சம் வரை போட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மூன்று மாதத்தில் ஒரு லட்சம் திருப்பி தரப்படும் என்றும் கமிஷன் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது.இந்த பணத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் திடீரென செக் வருவது நின்றதும், செக் பணம் இல்லாமல் திரும்பியதும், பணம் போட்டவர்கள் அதிர்ச்சியுற்றனர். அமைதியாக இருந்தவர்கள் கம்பெனிக்கு வந்து பார்த்துள்ளனர். கம்பெனி மூடிக்கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றவர்கள் என்ன செய்வதென்று திகைத்தனர் . இப்போது எல்லோரும் சேர்ந்து போலீசை தேடி வந்துள்ளனர். மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் தாங்கள் பணம் இழந்த கதையை மனுவாக கொடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி அளித்துள்ளார். ஈரோடு, மேட்டூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இவர்கள் மொத்தம் பல லட்சங்களை இழந்திருக்கின்றனர். இந்த மோசடி தமிழகம் முழுவதும் நடந்திருக்கும என கூறப்படுகிறது. இன்னும் பலர் வீதிக்கு வந்து போலீசை தேடுவர் என்பது இப்போதைய ஹைலைட்.

Comments