இந்தியா அபார பந்துவீச்சு * நியூசி., திணறல்

நாக்பூர்: நாக்பூர் டெஸ்டில், இந்திய பந்து வீச்சில் நிலைகுலைந்து போன நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து திணறுகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் "டிராவில்' முடிந்தன. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நேற்று நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் துவங்கியது.
மழையால் தாமதம்:
நேற்று முன் தினம் பெய்த கடும் மழையின் காரணமாக, போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணி நீண்ட நேரம் நடந்தது. இதனால் உணவு இடைவேளைக்கு முன், ஒரு ஓவர் கூட வீசப்பட வில்லை. மதியம் 12.30 மணிக்கு போட்டி துவங்கியது. "டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து தரப்பில் அறிமுக வீரராக மெக்கே களமிறங்கினார்.
ஸ்ரீசாந்த் மிரட்டல்: நியூசிலாந்து அணிக்கு கப்டில், மெக்கின்டோஸ் துவக்கம் தந்தனர். ஜாகிர் இல்லாத நிலையில், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா பந்து வீச்சில் மிரட்டினர். ஸ்ரீசாந்த் வேகத்தில், கப்டில் (6) சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய ஸ்ரீசாந்த், மெக்கின்டோசை (4) கிளீன் போல்டாக்கினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த ரோஸ் டெய்லர் (20), இஷாந்திடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
வெட்டோரி ஏமாற்றம்:
அடுத்து களமிறங்கிய ரைடர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணைந்த வில்லியம்சன் (0) இந்த முறை சாதிக்க தவறினார். கேப்டன் வெட்டோரியும் (3) ஏமாற்ற, 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது நியூசிலாந்து. மிடில் ஆர்டரில் ஹாப்கின்ஸ் (7) கைகொடுக்க தவறினார்.
ரைடர் ஆறுதல்:
பின்னர் ரைடருடன், மெக்கலம் இணைந்தார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பின் காரணமாக, 8 வது வீரராக களமிறங்கிய இவர் இந்திய பந்து வீச்சை சமாளித்து ஆடினார். மறுமுனையில் டெஸ்ட் அரங்கில், 6 வது அரை சதம் கடந்தார் ரைடர். 59 ரன்கள் சேர்த்த இவர், ரெய்னா பிடித்த சூப்பர் "கேட்சில்' வெளியேறினார். இந்நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி, 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கலம் (34), சவுத்தி (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா தரப்பில் ஸ்ரீசாந்த், இஷாந்த், ஓஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
------------
ரேங்கிங்கில் பின்னடைவு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகள் "டிரா' ஆனதால், டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் இந்தியா பின்னடைவை எதிர்நோக்கி உள்ளது. தற்போது ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி (130 புள்ளிகள்), நாக்பூரில் நடக்கும் 3 வது டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற்றாலும், ரேங்கிங் பட்டியலில் ஒரு புள்ளி பின்தங்க (129 புள்ளிகள்) நேரிடும். அதே சமயம் 78 புள்ளிகளுடன் தற்போது 8 வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி கூடுதலாக 2 புள்ளிகள் (80) பெறும். நாக்பூரில் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி 6 புள்ளிகளை (124) இழக்கும். அதே சமயம் நியூசிலாந்து 87 புள்ளிகளுடன் 6 வது இடத்துக்கு முன்னேறும். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் "டிராவில்' முடிந்தால், இந்தியா 126, நியூசிலாந்து 83 புள்ளிகள் பெறும். ரேங்கிங்கில் பின்னடைவு ஏற்பட்டாலும், இந்தியாவின் "நம்பர்-1' இடத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
-------------
தவறான கணிப்புநேற்றைய போட்டி துவங்குவதற்கு முன், ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர்," பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி' என வர்ணித்தார். ஆனால், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்க வில்லை. மாறாக, பவுலிங்கிற்கு சாதகமாக அமைந்தது. இதனையடுத்து இந்திய பவுலர்கள், விக்கெட் வேட்டை நடத்தினர்.
---------
ஸ்கோர் போர்டுமுதல் இன்னிங்ஸ்
நியூசிலாந்து
மெக்கின்டோஸ்(ப)ஸ்ரீசாந்த் 4(32)
கப்டில்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 6(14)
டெய்லர்-எல்.பி.டபிள்யு.,(ப)இஷாந்த் 20(24)
ரைடர்(கே)ரெய்னா(ப)ஹர்பஜன் 59(113)
வில்லியம்சன்(கே)சேவக்(ப)ஓஜா 0(3)
வெட்டோரி(ப)இஷாந்த் 3(6)
ஹாப்கின்ஸ்(கே)ரெய்னா(ப)ஓஜா 7(36)
மெக்கலம்-அவுட் இல்லை- 34(80)
சவுத்தி-அவுட் இல்லை- 7(31)
உதிரிகள் 8
மொத்தம் (56 ஓவரில் 7 விக்.,) 148
விக்கெட் வீழ்ச்சி: 1-11(கப்டில்), 2-16(மெக்கின்டோஸ்), 3-42(டெய்லர்), 4-43(வில்லியம்சன்), 5-51(வெட்டோரி), 6-82(ஹாப்கின்ஸ்), 7-124(ரைடர்).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 9-4-20-2, இஷாந்த் சர்மா 13-2-32-2, பிரக்யான் ஓஜா 19-2-49-2, ஹர்பஜன் 15-1-42-1.

Comments