"தெய்வம் இன்றே கொன்றது' : வக்கீல்கள், பொதுமக்கள், உறவினர் பேட்டி

கோவை :கோவையில் பள்ளிக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த கொடூரனை போலீசார், "என்கவுன்டர்' செய்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த வக்கீல்கள், பொதுமக்கள், "தெய்வம் இன்றே கொன்றது' எனக்கூறி வரவேற்பு தெரிவித்தனர்.
கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். கடந்த 29ம் தேதி, பள்ளி வேனுக்காக காத்திருந்த இவரது மகள் முஸ்கன்(11) மகன் ரித்திக்(8) ஆகியோர் வேனில் கடத்தப்பட்டு, பல்வேறு சித்ரவதைக்குப் பின், கொலை செய்யப்பட்டனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவின் படி அமைக்கப்பட்ட எட்டு தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக டிரைவர் மோகனகிருஷ்ணன், அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த இவனது கூட்டாளி மனோகரன் ஆகியோரைக் கைது செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிடம், குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் மேலும் சில தகவல்களை பெற முடிவு செய்த போலீசார், நேற்று முன்தினம், மூன்று நாள் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.நேற்று காலை தப்பிக்க முயன்றபோது, மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டான்.கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி, இறந்த குழந்தைகளின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் வக்கீல்களின் பேட்டி:

கோவில் பூசாரி சுந்தரராஜன்: கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நான், ரங்கேகவுடர் வீதியில் உள்ள விநாயகர் கோவில் பூசாரி. தினமும் காலை 7.45 மணிக்கு பள்ளிக்கு புறப்பட்டு வரும் குழந்தைகள், கோவிலுக்கு வந்து ஐந்து நிமிடம் கடவுள் தரிசனத்தை முடித்துக் கொண்டு தான் பள்ளிக்குச் செல்வார்கள்.ஒன்றை ஆண்டுகளாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பிஞ்சுகளை கடத்திக் கொன்றது கொடூரச் செயல். தற்போது, கடத்திச் சென்றவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம், ஆண்டவன் அளித்த தண்டனை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.உறவினர்கள் நாரங்கி,

பிஸ்தாதேவி: குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. போலீசார் அவர்களுக்கு கொடுத்த தண்டனை திருப்தியாக உள்ளது.பக்கத்து வீட்டுப் பெண் ஜெயந்தி: தீபாவளியை நாங்கள் கொண்டாடவில்லை. குழந்தைகளை கடத்தி கொன்றவன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை கேட்டதும் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. தீபாவளியை இன்று தான் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோம். அதுவும் இவ்வளவு விரைவில் போலீசார் தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாக இருக்கிறது.

வக்கீல் வெண்ணிலா: குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். ஒரு பாவமும் அறியாத முஸ்கன், ரித்திக் ஆகியோருக்கு ஏற்பட்ட கொடூரத்தை கண்டு, ஒட்டு மொத்த மக்களும் செய்த கூட்டு பிரார்த்தனை பலித்துள்ளது. தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு பதில், தெய்வம் இன்றே கொன்று விட்டது. துணிச்சலுடன் செயல்பட்டு கொடூரனை வதைத்த போலீசாருக்கு பாராட்டுகள். குழந்தை கடத்தல் சம்பவங்கள் இனிமேல் குறையும் என்பதில் நம்பிக்கை துளிர்த்துள்ளது.

வக்கீல் தசரதன்: பிஞ்சுக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவம் மனித சமுதாயத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை. இக்கொடும் செயலை மேற்கொண்ட கயவனை போலீசார் சுட்டுக் கொன்றதை இதயம் உள்ள மனிதர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. யோசித்து செயல்பட்ட என்கவுன்டர் அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். கமிஷனர் சைலேந்திரபாவுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

பக்கத்து வீட்டுக்காரர் ராஜா: உண்மையான தீபாவளியை இன்று தான் கொண்டாடுகிறோம். வாரிசுகளை இழந்து கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கும் அந்த பெற்றோரின் மனதில், இப்போது தான் சிறிது ஆறுதல் ஏற்பட்டுள்ளது. என்கவுன்டர் போலீசாரை மனதார வாழ்த்துகிறோம். கமிஷனர் சைலேந்திரபாபுவை கடவுளாக பார்க்கிறோம்.

வக்கீல் பாண்டியராஜ்: குழந்தைகளை கடத்திக் கொன்ற குற்றவாளி, பாதுகாப்புக்கு சென்ற போலீசாரை நோக்கி சுட்டது பெரும் குற்றம். இவனை போலீசார் சுட்டுக் கொன்றதை வரவேற்கிறோம். இதில் யாருக்கும், எவ்வித கருத்து வேறுபாடும் இருக்காது.

"கோவை கொலைக்காரனுக்கு' போலீசின் சரியான தீர்ப்பு :  "என்கவுன்டருக்கு' மக்களிடம் வரவேற்பு

கோவையில் சில வாரங்களுக்கு முன்பு, பள்ளி சிறுவர்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக இரு மனித மிருகங்கள் கொலை செய்த நிகழ்வு மக்களின் நெஞ்சங்களையே பிழிந்தது. இந்த அக்கிரமக்காரர்களின் தவறுகளுக்கு "மனிதகுலம் தலைவாரி பூச்சூடக்கூடாது, உடனேயே தூக்கிலிடுங்கள்' என்ற கோபக் குரல்கள் அனைத்து பகுதிகளிலும் எழுந்தன. வெறிபிடித்து விபரீதங்களை விளைவித்து, இரு பிஞ்சுகளை முளையிலே அழித்துவிட்ட மோகன்ராஜ் (33), மனோகரன் (33) ஆகியோரின் குற்றச் செயல்களுக்கு, பொய்யொழுக்கத்திற்கு பொன்னாடை போர்த்தாமல், ஒருவனை போலீசார் என்கவுன்டரில் பொசுக்கிய செய்தி, அனைவர் மனதிலும் பால்வார்த்தது."நீதி காப்பாற்றப்பட்டிருக்கிறது' என்கிறார்கள் மனித நேயத்தை சுவாசித்து நேசிப்பவர்கள்.

குடும்பத்தலைவிகள், குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ, கார் டிரைவர்களிடம் இதுப்பற்றி கேட்டோம்.அவர்களின் கருத்துக்கள் இதோ...

மதுரைகதிரவன் (ஆட்டோ டிரைவர்): மிகவும் துயரமான இந்த சம்பவத்தை செய்த பாவிக்காக அரசு ஒரு தோட்டாவை வீணாக்கியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவனை அன்றே மக்களிடம் ஒப்படைத்திருந்தால், தீர்ப்பு அன்றே வழங்கப்பட்டிருக்கும். போலீசார் கைது செய்து, இவ்வளவு நாளும் பாதுகாப்பில் வைத்திருந்ததே தவறு. காலம் கடந்திருந்தாலும் சரியான தீர்ப்பு. குழந்தைகளை கடத்துவோருக்கு இது ஒரு படிப்பினை.

விஜயலட்சுமி (குடும்பத்தலைவி): குழந்தைகளை கொன்ற கொடியவர்களுக்கு இது போன்று எந்த தண்டனை கொடுத்திருந்தாலும் அது சரியானது தான். பெற்றோர் சமுதாயம் இதை வரவேற்கிறது. சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால், கோர்ட், கேஸ் என காலம் கடந்து குற்றவாளி தப்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். குழந்தைகளை கடத்துபவர்கள் மீது போலீசார் இது போல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 திண்டுக்கல் :பாண்டி(ஆட்டோ டிரைவர்): பொதுமக்கள் ஆட்டோ டிரைவர் மீது நம்பிக்கை வைத்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமான டிரைவர் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுடப்பட்டது சரியே. போலீசாருக்கு வேறு வழியில்லை.
கலைச்செல்வி(குடும்பத்தலைவி): வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது தான். அதேசமயம் குழந்தையை பறி கொடுத்த பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும். ஈவு இரக்கமற்ற முறையில் குழந்தைகளை கொலை செய்த மோகன்ராஜிற்கு ஏற்பட்ட முடிவு சரியே.

தேனி: ஜி.அர்ஜூன் (ஆட்டோ டிரைவர்):  குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தான் அந்த இழப்பின் உண்மையான வலி தெரியும். ஒரு குழந்தைக்கு தந்தையான கடத்தல்காரன், மற்றவரின் உணர்வுகளை மதிக்காமல் மிருகத்தனத்துடன் செயல்பட்டதால், அவனை கொன்றதே மிகவும் சரியான தீர்வு. குற்றவாளிகளுக்கு எதிரான போலீசாரின் என்கவுன்டர் நடவடிக்கைகள் நிச்சயம் சமூதாயத்தை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.

பி.பிச்சைமணி (குடும்பத்தலைவி): குழந்தைகளை கொன்ற கடத்தல்காரன் பொதுமக்கள் கையில் சிக்கியிருந்தால், அன்றே கொன்றிருப்பர். அந்த அளவுக்கு கடத்தல் குற்றவாளிகள் மீது பொதுமக்களுக்கு ஆத்திரம் இருந்தது. போலீசாரிடம் சிக்கியதால் ஒரு வாரம் கழித்து கொல்லப்பட்டிருக்கிறான். பெரிய குற்றங்களை தடுக்க குற்றவாளிகளை சுட்டுக்கொல்லும் நடைமுறை நல்ல பலனை கொடுக்கும்.

ராமநாதபுரம் :காளிதாஸ் (ஆட்டோ டிரைவர்): சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி குற்றவாளிகள் வரம்பு மீறுவது அதிகரித்துவிட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை ஆட்சேபணை இன்றி வரவேற்க வேண்டியது. முள்ளை முள்ளால் எடுக்க பாரபட்சம் தேவையில்லை. ஒவ்வொரு குழந்தைக்கு பின்னால், பெற்றோரின் பலஆயிரம் கனவுகள் உள்ளன. இதை ஆட்டோ டிரைவராக மட்டுமின்றி, பெற்றோராகவும் என்னால் உணர முடிகிறது. இதை நசுக்க நினைப்பவர்களுக்கு சரியான பாடம் கிடைத்துள்ளது.
மிசாகம்மாள் (குடும்பத்தலைவி): சுட்டுக் கொன்றது குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது போல் உள்ளது. இவர்களை வெளிநாடுகளில் உள்ளதைபோல் பொது இடங்களில் தண்டிக்க வேண்டும்.சென்னையில் சிறுவனை கடத்திய பட்டதாரிகளுக்கும் இது போன்ற தண்டனை வழங்க வேண்டும் . இதுபோன்ற நடவடிக்கையால் பெற்றோர்கள் அச்சமின்றி இருக்க முடியும்.

"மனிதர்களுக்கு மட்டுமே மனித உரிமை சட்டத்தை மதிக்காத மிருகங்களுக்கு இல்லை' :  பொதுமக்கள் ஆவேசம் :

வக்கீல் முத்து: பள்ளி குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்ற குற்றவாளி மோகனகிருஷ்ணன், விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரையும் சுட்டுக் கொல்ல முயன்றிருக்கிறான். அவனை போலீசார் தற்காப்புக்காக சுட்டுக் கொன்றது சரியே.இதுபோன்ற கிரிமினல்களை வெளியில் நடமாட அனுமதித்தால், பொதுமக்களால் நிம்மதியாக வாழ முடியாது. சுதந்திர உரிமை என்பது, சட்டங்களை மதித்து நடக்கும் மக்களுக்கே பொருந்தும். கிரிமினல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு பாழாகிவிடும்.பள்ளி குழந்தைகளை கடத்தி மனிதாபிமானமற்ற முறையில் பாலியல் பலாத்காரம் செய்த கிரிமினலுக்கு ஆதரவளித்தால்... அது, அமைதியை விரும்பும் மக்களுக்கு எதிரான செயலாகவே இருக்கும். துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்ட கோவை மாநகர போலீசாரை பாராட்டுகிறேன்.

கல்லூரி மாணவர் சமயமுத்து: போலீஸ் "என்கவுன்டரை', மனித உரிமை என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும். மனித உரிமை என்பது, மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.பள்ளி சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த பாதகன், மனிதனே அல்ல! அதனால், மனித உரிமை என்பது, இவனை போன்ற கொடூரர்களுக்கு பொருந்தாது. போலீசார் "என்கவுன்டர்' நடத்தியது, கிரிமினலிடம் இருந்து மக்களை பாதுகாக்கவே.எனவே, போலீசாரை எந்த விதத்திலும் குற்றம் சுமத்த முடியாது. மனித உரிமை பற்றி பேசுவோர், அவர்களது வீட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார்களா? கிரிமினல்களுக்கு ஆதரவாக மனித உரிமை பற்றி பேசுபவர்கள், பள்ளி குழந்தைகளை கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்? அப்பாவி குழந்தைகளின் வாழும் உரிமையை பறித்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் மனித உரிமை பற்றி பேசக் கூடாது.

தனியார் நிறுவன ஊழியர் பரமேஸ்வரன்: எந்த ஒரு நாட்டிலும் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாட வேண்டும்; கிரிமினல்கள் போலீசுக்கு அஞ்சி பதுங்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலைமை அப்படியா இருக்கிறது? கிரிமினல்களை கண்டு மக்கள் அஞ்சுகின்றனர்; கிரிமினல்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்!சென்னையில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இது, போலீஸ் மீது கிரிமினல்களுக்கு பயமின்மையையே காட்டுகிறது. இப்படியே போனால், நாடு என்னாவது? மக்கள் என்னாவது? இந்நிலை நீடிக்கக் கூடாது. கிரிமினல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக போலீசார் துணிந்து மேற்கொள்ள வேண்டும்.ஆள் கடத்தலில் ஈடுபடும் கிரிமினல்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும், போலீசார் தங்களை தற்காத்து கொள்ளவும் இதுபோன்ற "என்கவுன்டர்களை' தொடர வேண்டும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாரை, அரசு கவுரவிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர் வசந்த்: நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சம்பவங்களை பார்க்கும் போது, அச்சம் தலை தூக்குகிறது. குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தால், அவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும்.ஆனால், விடுதலைக்கு பின் மீண்டும், மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்துகின்றனர். "100 முறை சிறை சென்றவன் கைது', "200 முறை சிறை சென்றவன் கைது' என்ற செய்திகளை பத்திரிகைகளில் வாசிக்கும் போது, இவர்களை திருத்தவே முடியாதா? திருந்த மாட்டார்களா? என்ற ஏக்கம் ஏற்படுகிறது.இப்படி, தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடும் நபர்களை எப்படி தான் திருத்துவது? "என்கவுன்டர்' ஒன்று தான் சிறந்த வழி. தங்களது உயிருக்கு பயம் ஏற்படும் போது தான், கிரிமினல்கள் திருந்துவர்.

போலீசாருக்கு "தினமலர்' வாசகர்கள் பாராட்டு மழை : "தினமலர்' இணையதளத்தில் இந்த செய்தி வெளியானதும் என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு வாசகர்கள், தங்கள் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தனர். நேற்று இரவு 8 மணி வரை 1,500க்கும் மேற்பட்ட வாசகர்கள், இந்த செய்திக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா, கஜகஸ்தான், அபுதாபி, சவூதி அரேபியா, குவைத், துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்து கருத்துக்கள் வந்து குவிந்துள்ளன.அனைவருமே போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டே தெரிவித்திருந்தனர். போலீசாரின் செயலைக் குறை கூறியோ, விமர்சித்தோ எவரும் கருத்து தெரிவிக்காததன் மூலம், இந்த சம்பவம் எல்லாரையும் எந்த அளவு பாதித்துள்ளது என்பது புலனாகிறது.தவறு செய்யும் எவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை இந்த வாசகர்களின் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. மக்களிடையே சரியான விழிப்புணர்வு உள்ளது என்பதை, இந்த கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை போன்ற கொடூர சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.

கோவையில் மீண்டும் ஒரு தீபாவளி :  கோவையில் குழந்தைகளை கடத்தி கொலை செய்த இருவரில் ஒருவன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், வக்கீல்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் வசிக்கும் ரங்கேகவுடர் வீதி, காத்தான்செட்டி தெருவில், நேற்று காலை முதல் பட்டாசு வெடித்து தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதேபோல், ரங்கேகவுடர் வீதி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கலெக்டர் மற்றும் கமிஷனர் அலுவலகம் முன், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, அவினாசி ரோடு, காந்திபுரம், உக்கடம் -பேரூர் பை-பாஸ் ரோடு, செல்வபுரம் பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். போலீஸ் என்கவுன்டருக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்த நிகழ்ச்சி, மீண்டும் ஒரு தீபாவளியை நினைவூட்டியது.

கோவை போலீசாருக்கு  ம.தி.மு.க.,பாராட்டு : "குற்றம் செய்தால் இதுதான் கதி' என்பதை, கோவை மாநகர போலீசார் உணர்த்தியுள்ளதாக ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி ம.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம்:
கடந்த 10 நாட்களாக கோவை மாநகர மக்கள் நெஞ்சத்தில் குடியிருந்த நெருப்பு "என்கவுன்டர்' மூலம் அணைக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் அச்சம் நீங்கி உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி நவ.,5ல் கொண்டாடப்பட்டது. ஆனால் கோவை மக்கள் இன்று தான்(நவ.,9) தீபாவளியை கொண்டாடுகின்றனர். குற்றம் செய்யும் ஒவ்வொருவரும் மோகனகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் கோவை போலீசாரின் நடவடிக்கை அமைந்துள்ளது.திருட்டு, கொலை, கொள்ளையில் ஈடுபடும் நபர்களை எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி சட்டப்படி நடவடிக்கை எடுத்து, போலீசார் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இ.ம.க.,வினர் இனிப்பு வழங்கல் : கோவையில் பள்ளி மாணவ, மாணவியரை கடத்திக் கொன்ற மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு நன்றி தெரிவித்து, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மாநில பொது செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட துணை தலைவர் குருமூர்த்தி, தொழிற்சங்க வட்டார தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ், நகர இளைஞரணி கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல், வாவிபாளையத்தில் உ.உ.க., சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொங்கலூர் வட்டார இளைஞரணி அமைப்பாளர் சோமசுந்தரம், இளைஞரணி சரத்குமார், தி.மு.க., நிர்வாகி லோகநாதன் உட் பட பலர் பங்கேற்றனர்.

சூலூர் மக்கள் மகிழ்ச்சி  : கோவையில் போலீசாரின் "என்கவுன்டர்' நடவடிக்கையை வரவேற்று சூலூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டாசு வெடித்தனர். கோவையில் பள்ளி குழந்தைகளை வேனில் கடத்தி சென்று, வாய்க்காலில் வீசி கொலை செய்த மோகனகிருஷ்ணனை நேற்று அதிகாலை போலீஸ் "என்கவுன்டரில்' கொல்லப்பட்டான். இத்தகவல் வெளியானதை அடுத்து, கோவை நகர் மற்றும் புறநகரில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவை நகரில் பல்வேறு அமைப்பினர் போலீசாரின் "என்கவுண்டர்' நடவடிக்கையை வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் சூலூர் கிளை சார்பாக, பாப்பம்பட்டி பிரிவில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

Comments