போலீசார் சுட்டது ஏன்?கமிஷனர் பேட்டி

கோவை : "என்கவுன்டர்' நடவடிக்கையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.ஐ.,க்கள் முத்துமாலை, ஜோதியை சந்தித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார்.

கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் கமிஷனர் அளித்த பேட்டி: பள்ளிக் குழந்தைகள் இருவர், கால் டாக்சியில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு பின் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரனிடம் மேலும் பல விவரங்களை திரட்ட வேண்டியிருந்தது.இதற்காக, அவர்கள், போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு, கொலை நடந்த இடத்துக்கு விசாரணைக்காக வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். தனிப்படை அதிகாரியான உதவிக்கமிஷனர் குமாரசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.செல்லும் வழியில் கோவை - பொள்ளாச்சி சாலையிலுள்ள ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், மாற்றுவழியான செட்டிபாளையம் ரோட்டில் கொண்டு செல்லப்பட்டனர்.வழியில், உடனிருந்த போலீஸ் எஸ்.ஐ., ஜோதியிடம் இருந்த துப்பாக்கியை பறித்த மோகனகிருஷ்ணன், வேனை திருப்பி கேரளா நோக்கி ஓட்டுமாறு டிரைவரை மிரட்டினான்.

அடுத்த கணமே, உடனிருந்த போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றிலும், மற்றொரு எஸ்.ஐ., ஜோதியின் கையிலும் குண்டுகள் பாய்ந்தன. எனினும், சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ., முத்துமாலை ஆகியோர், தற்காப்புக்காக துப்பாக்கியால் திருப்பி சுட்டனர்.இதில் மோகனகிருஷ்ணனின் நெற்றி, மார்பில் குண்டு பாய்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் இறந்தான். குண்டு பாய்ந்து காயமடைந்த இரு எஸ்.ஐ.,க்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டிருக்காவிடில், போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.இவ்வாறு கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

டாக்டர் பேட்டி: கே.எம்.சி.எச்., மருத்துவமனை சேர்மன் டாக்டர் நல்லா பழனிச்சாமி கூறுகையில், "எஸ்.ஐ.,க்களில் ஜோதி என்பவருக்கு இடது கையிலும், முத்துமாலைக்கு வயிற்றிலும் குண்டு பாய்ந்துள்ளது. இதனால், முத்துமாலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

Comments